முற்கால பாண்டியர் நடுகல் கண்டெடுப்பு


முற்கால பாண்டியர் நடுகல் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 18 May 2022 12:24 AM IST (Updated: 18 May 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை அருகே முற்கால பாண்டியர் நடுகல் கண்டெடுக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே முற்கால பாண்டியர் நடுகல் கண்டெடுக்கப்பட்டது. 
கள ஆய்வு 
அருப்புக்கோட்டை அருகே இலுப்பையூரில் வரலாற்று துறை பேராசிரியர் விஜயராகவன் மற்றும் வரலாற்று துறை மாணவர்கள் சரத்ராம், ராஜபாண்டி ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர். அதில் கி.பி. 9-10-ம் நூற்றாண்டை சேர்ந்த முற்கால பாண்டியர்களின் நடுகல்லினை கண்டறிந்தனர். 
இதுகுறித்து வரலாற்று துறை பேராசிரியர் விஜயராகவன் கூறியதாவது:- 
இந்த கல்வெட்டானது 6 அடி உயரமும், 2 ½ அடி அகலமும் கொண்ட கல்லின் மேல் பகுதியில் 11 வரிகள் கொண்ட வட்டெழுத்து கல்வெட்டாக காணப்படுகிறது. இக்கல்வெட்டின் வரிகளை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளா் சாந்தலிங்கம் உதவியோடு படிக்கப்பெற்றது.
உயிர் நீத்த வீரன் 
 இக்கல்வெட்டில் இடது பாதி முற்றிலும் சிதைந்தும், வலது பாதியில் மட்டும் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டானது 2 ஊர்களுக்கிடையே ஏற்பட்ட பூசலில் புல்லன்சாத்தன் என்னும் வீரர் ஒரு ஊரை வென்று உயிர் நீத்தார் என்பதை கூறுகிறது. இதுவரையில் பாண்டியநாட்டில் கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து நடுகற்கள் 2 மட்டுமே கிடைத்துள்ளன. அதில் ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ள இலுப்பையூர் கல்வெட்டாகும். 
மற்றொன்று இதே ஊருக்கு தெற்கில் 5 கிலோமீட்டர் தொலைவில் ராமநாதபுரம் மாவட்டம் நீராவிக்கு அருகிலுள்ள கரிசல்குளம் என்ற கிராமத்தில் உள்ள நடுகல் ஆகும். இது ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது.  பசுக்கூட்டங்களை கவர்ந்து சென்றபோது எதிர்த்து போரிட்டு உயிர் நீத்த வீரனுக்கு நடப்பட்ட நடுகல் தான் இது. 
விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரையில் ராஜபாளையம் அருகே முதுகுடியில் பிற்கால பாண்டியரின் நடுகல்லானது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இம்மாவட்டத்தில் எங்களது களப்பணியின் வாயிலாக முற்கால பாண்டியரின் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story