10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு


10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
x
தினத்தந்தி 18 May 2022 12:25 AM IST (Updated: 18 May 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

ஓசூர்:
அமைச்சர் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 22-ந்தேதி ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடத்துகின்றன. இதையொட்டி, கல்லூரி வளாகம் மற்றும் முகாம் நடைபெறும் இடங்களை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
தொடர்ந்து மாவட்ட வன அலுவலக கூட்டரங்கில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் துறை இயக்குனர் வீரராகவராவ், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி செல்லகுமார் எம்.பி., ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, மேயர் எஸ்.ஏ.சத்யா, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குனர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் சி.வி.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலை வாய்ப்பு
தமிழக முதல்-அமைச்சர், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தர வேண்டும் என்ற அடிப்படையில், இதுவரை தமிழகத்தில் 57 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு 74 ஆயிரம் இளைஞர்கள் தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று உள்ளனர். இளைஞர்கள் படித்து முடித்தவுடன், தங்கள் தனித்திறனை வளர்த்து கொள்ளும் வகையில், திறன் மேம்பட்டு பயிற்சிகளில் கலந்து கொண்டு தங்கள் தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 300-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாமில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. 
உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.
இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் மற்றும் வேலை நாடுவோர் கலந்து கொண்டு பயனடைய வேண்டும். இந்த முகாமில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அதிகாரிகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்ய வேண்டும். முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு குடிநீர், பஸ் மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 இவ்வாறு அமைச்சர் கூறினார். 
இந்த நிகழ்ச்சியில், ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணை இயக்குனர் லதா, தொழிலாளர் நலத்துறை சேலம் மண்டல இணை ஆணையாளர் ரமேஷ், தொழில் நிறுவனங்களின் இணை இயக்குனர் சபீனா, ஓசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன், பூனப்பள்ளி தி.மு.க. கிளை செயலாளர் மஞ்சுநாதப்பா மற்றும் அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story