மறுவளர்ச்சி திட்டத்தில் மேம்படுத்தப்படும் கும்பகோணம் ரெயில் நிலையம்


மறுவளர்ச்சி திட்டத்தில் மேம்படுத்தப்படும் கும்பகோணம் ரெயில் நிலையம்
x
தினத்தந்தி 18 May 2022 1:09 AM IST (Updated: 18 May 2022 1:09 AM IST)
t-max-icont-min-icon

தெற்கு ரெயில்வேயின் மறுவளர்ச்சி திட்டத்தில் கும்பகோணம் ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

கும்பகோணம்:
தெற்கு ரெயில்வேயின் மறுவளர்ச்சி திட்டத்தில் கும்பகோணம் ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
கும்பகோணம் ரெயில் நிலையம்
தெற்கு ரெயில்வேயின் மறுவளர்ச்சி திட்டத்தில் 4 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. அவற்றில் கும்பகோணம் ரெயில் நிலையமும் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் பல்வேறு புதிய வசதிகளை ஏற்படுத்தவும், இதுவரை உள்ள வசதிகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
தெற்கு ரெயில்வேயின் கட்டுமான அமைப்பு, கும்பகோணம் ரெயில் நிலையத்தில் மறுவளர்ச்சி திட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. திருச்சி ரெயில்வே கோட்டத்தின் முக்கிய ரெயில் நிலையமாக கும்பகோணம் ரெயில் நிலையம் விளங்குகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கென மூத்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார். 
திட்ட ஆலோசகர் நியமனம்
கோவில் நகரமான கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோவில்களில் தரிசனம் மற்றும் பரிகாரம் செய்வதற்கு என நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆண்டு முழுவதும் வந்து செல்கின்றனர்.
கும்பகோணம் ரெயில் நிலையத்தில் மறுவளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த திட்ட ஆலோசகர் நியமனம் செய்யப்பட உள்ளார். அவர், கும்பகோணம் ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்து இதுவரை உள்ள வசதிகளையும், புதிதாக பயணிகளின் வசதிக்காக ஏற்படுத்த உள்ள வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு திட்ட அறிக்கையை தயார் செய்து சமர்பிப்பார். ஆலோசகர் தேர்ந்தெடுப்பதற்கு முறையே டெண்டர் விடப்படும் என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
முழுமையான திட்ட அறிக்கை
விழுப்புரம்- தஞ்சாவூர் வழித்தடத்தின் முக்கிய ரெயில் நிலையமாக உள்ள கும்பகோணம் ரெயில் நிலைய மறுவளர்ச்சி மேம்பாட்டிற்கென நியமிக்கப்படும் திட்ட ஆலோசகர் இதற்கான முழுமையான திட்ட அறிக்கையை தெற்கு ரெயில்வேயின் கட்டுமான அமைப்பு மற்றும் திருச்சி கோட்ட அதிகாரிகளுடன் இணைந்து தயார் செய்வார்.. 
முழுமையான திட்ட அறிக்கையை தயார் செய்வதற்கு முன்பாக ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்கு வழிவகை செய்யக்கூடிய பல்வேறு சிறப்பம்சங்கள் கருத்தில் கொள்ளப்படும் என்றும். எஸ்கலேட்டர், லிப்ட் வசதிகள் ஏற்படுத்துவதும் இந்த திட்டத்தின் ஓர் அங்கமாக கருதப்படும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.  
திட்ட மதிப்பீடு
இந்த மேம்பாட்டிற்கான முழுமையான திட்டம் தெற்கு ரெயில்வே கட்டுமான அமைப்பின் உயர் அதிகாரிகளின் ஒப்புதலுக்கு சமர்பிக்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான மதிப்பீடுகள் தயார் செய்யப்படும். திட்டத்தினை செயல்படுத்துவதற்கான ஆலோசகர் கண்டறிந்து முழுமையதன திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு மூன்று மாதங்கள் ஆகும் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
கும்பகோணம் ரெயில் நிலையம் விழுப்புரம்-தஞ்சாவூர் வழித்தடத்தில் அமைந்துள்ள முக்கிய நிலையம் என்றும் இங்கு பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்களும் பிற மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களும் நின்று செல்கின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story