மின் ஊழியர் மத்திய அமைப்பினா் ஆர்ப்பாட்டம்
மின் ஊழியர் மத்திய அமைப்பினா் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் வட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் துறைமங்கலம் நான்கு ரோடு அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. பறவைகள், விலங்குகள் மின்கம்பியில் சிக்கி பலியாவது போல் மின் விபத்துக்குள்ளாகி மின் ஊழியர்கள் உயிரிழப்பதை தவிர்க்க தமிழ்நாடு மின்வாரியம் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை சீற்றம், புயல், சூறாவளிக்காற்று, மழை போன்ற காரணங்களால் ஏற்படும் மின்தடையை சரி செய்யச்செல்லும் மின்வாரிய ஊழியர்களை பொதுமக்கள் தாக்குவதும், இழிவாகப் பேசுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இவற்றை தமிழக அரசு தடுத்து மின் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ரங்கராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். வட்ட செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் கண்ணன் மற்றும் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். முடிவில் கோட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில் நன்றி கூறினார்.