வைர நகைகளுக்கு போலி நற்சான்றிதழ் வழங்கிய வழக்கு: 2 பெண்களுக்கு முன்ஜாமீன்


வைர நகைகளுக்கு போலி நற்சான்றிதழ் வழங்கிய வழக்கு: 2 பெண்களுக்கு முன்ஜாமீன்
x
தினத்தந்தி 18 May 2022 2:02 AM IST (Updated: 18 May 2022 2:02 AM IST)
t-max-icont-min-icon

வைர நகைகளுக்கு போலி நற்சான்றிதழ் வழங்கிய வழக்கு: 2 பெண்களுக்கு முன்ஜாமீன் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

பெங்களூரு: மங்களூருவை சேர்ந்தவர்கள் பிரதிகா ராய் பெல்லியா (வயது 33), ஹரிணி ஷெட்டி (38). இவர்கள் 2 பேரும் சேர்ந்து பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வைர நகைகள் தயாரிப்பு நிறுவனத்தின் பேரில், போலியாக வைர நகைகளுக்கு உரிய நற்சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்து வந்து உள்ளனர். இதுபற்றி அறிந்த அந்த நிறுவனத்தின் மேலாளர் அசோக்நகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் பிரதிகா, ஹரிணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க பிரதிகாவும், ஹரிணியும் முன்ஜாமீன் கேட்டு பெங்களூரு கூடுதல் சிட்டி சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனு மீதான விசாரணை நடந்து வந்த நிலையில் 2 பேருக்கும் முன்ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்து விட்டார். இதையடுத்து 2 பேரும் முன்ஜாமீன் கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி முன்னிலையில் நடந்து வந்தது. இந்த நிலையில் மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி, 2 பெண்களின் வயதையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினார். மேலும் 2 பெண்களும் தலா ரூ.2 லட்சம் பிணய பத்திரத்தை கோர்ட்டில் தாக்க செய்ய வேண்டும் என்றும், சாட்சிகளை அழிக்க முயற்சி செய்ய கூடாது என்று கூறி உத்தரவிட்டார்.

Next Story