பண்ணை குட்டையில் மூழ்கி அக்காள்-தங்கை உள்பட 3 சிறுமிகள் சாவு


பண்ணை குட்டையில் மூழ்கி அக்காள்-தங்கை உள்பட 3 சிறுமிகள் சாவு
x
தினத்தந்தி 18 May 2022 2:53 AM IST (Updated: 18 May 2022 2:53 AM IST)
t-max-icont-min-icon

கதக் அருகே பண்ணை குட்டையில் மூழ்கி அக்காள்-தங்கை உள்பட 3 சிறுமிகள் உயிரிழந்தனர்

கதக்: கதக் அருகே பண்ணை குட்டையில் மூழ்கி அக்காள்-தங்கை உள்பட 3 சிறுமிகள் உயிரிழந்தனர்.

3 சிறுமிகள் சாவு

கதக் மாவட்டம் முண்டரகி தாலுகா அத்திகட்டி தாண்டா கிராமத்தை சேர்ந்தவர்கள் சுனிதா (வயது 9), அங்கிதா (13). இவர்களின் உறவுக்கார சிறுமி பெயரும் சுனிதா ஆகும். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுனிதா, அங்கிதா, மற்றொரு சுனிதா ஆகிய 3 பேரும் ஆடு மேய்க்க சென்றனர். அப்போது கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை குட்டையில் 3 பேரும் தண்ணீர் குடிக்க சென்றனர். இந்த சந்தர்ப்பத்தில் பண்ணை குட்டையில் 3 பேரும் தவறி விழுந்தனர்.

அந்த பண்ணை குட்டையில் ஆழம் அதிகமாக இருந்ததாலும், நீச்சல் தெரியாததாலும் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். சிறிது நேரத்தில் 3 பேரும் குட்டையில் மூழ்கி இறந்தனர். 

உடல்கள் மீட்பு

இதுபற்றி அறிந்ததும் முண்டரகி போலீசார், தீயணைப்பு படையினர் அங்கு சென்று 3 பேரின் உடல்களையும் மீட்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் நேற்று முன்தினம் உடல்களை மீட்க முடியவில்லை. நேற்று 2-வது நாளாக உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்தது. 

நீண்ட போராட்டத்துக்கு பிறகு 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. பின்னா் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து முண்டரகி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story