கர்நாடகத்தில் மதமாற்ற தடை அவசர சட்டம் அமல்; கவர்னர் ஒப்புதல்
கர்நாடகத்தில் மதமாற்ற தடை அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். அதன்பேரில் இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.
பெங்களூரு: கர்நாடகத்தில் மதமாற்ற தடை அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். அதன்பேரில் இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.
மந்திரிசபை கூட்டம்
கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா கர்நாடக சட்டசபையில் கடந்த 2021-ம் ஆண்டு பெலகாவியில் நடைபெற்ற கூட்டத்தொடரில் காங்கிரசின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா மேல்-சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அது ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இதற்கிடையே மதமாற்றத்திற்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிக்க கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அந்த அவசர சட்டம், கவர்னரின் ஒப்புதலுக்காக ராஜ்பவனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சடோ, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து மதமாற்ற எதிர்ப்பு அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். இந்த நிலையில் கர்நாடக அரசு அனுப்பிய மதமாற்ற தடை அவசர சட்டத்திற்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கினார்.
பரிசு பொருட்கள்
இந்த அவசர சட்டத்தின்படி, ஒருவரை மதம் மாற்றும் நோக்கத்தில் அவருக்கு பரிசு பொருட்கள், பணம், பிற பொருட்கள், வேலை, மத அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளி-கல்லூரிகளில் இலவச கல்வி வழங்குவது, திருமணம் செய்ய உறுதி அளிப்பது, நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுப்பதாக கூறுவது, மத மகிழ்ச்சியை ஏற்படுத்தி கொடுப்பதாக கூறுவது, ஒரு குறிப்பிட்ட மதத்தை தவறாக சித்தரித்து கூறி மதமாற்ற தூண்டுவது ஆகியவை குற்றம் ஆகும்.
மதம் மாற ஒருவருக்கு அவரது விருப்பத்திற்கு மாறாக அழுத்தம் கொடுப்பது, மிரட்டுவது தவறு ஆகும். ஒருவர் சட்ட விதிகளை மீறி கட்டாயமாக மதம் மாறி இருந்தால், அதுபற்றி குடும்ப உறுப்பினர்களோ, நண்பர்களோ அல்லது வேறு யாராவதோ சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எழுத்து மூலமாக புகார் அளிக்கலாம். கட்டாய மதம் மாற்றம் உறுதி செய்யப்பட்டால் தவறு செய்தவருக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும். அத்துடன் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
10 ஆண்டுகள் தண்டனை
சிறுவர்கள் அல்லது மனநிலை சரி இல்லாதவர்கள், பெண்கள் அல்லது ஆதிதிராவிடர்-பழங்குடியினத்தை சேர்ந்தவர்களை சட்ட விதிகளை மீறி மதம் மாற்றினால் தவறு செய்தவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். அதிக எண்ணிக்கையில் கூட்டமாக மதம் மாற்றினால் அதில் தவறு செய்வோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
மேலும் மத மாற்றத்தால் பாதிக்கப்படுவோருக்கு கோர்ட்டு ரூ.5 லட்சம் வரை நிவாரணம் வழங்க குற்றவாளிக்கு உத்தரவிட முடியும். 2-வது முறையாக அதே குற்றம் செய்பவருக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இந்த சட்ட விதிகளை பின்பற்றாமல் ஆணோ அல்லது பெண்ணோ வேற்று மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்தால், அதை செல்லாது என்று குடும்ப நல கோர்ட்டு அறிவிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய மாற்று மத திருமணத்திற்கு முன்கூட்டியே விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என்று சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.
விசாரணை நடத்தப்படும்
இந்த சட்ட விதிகளை மீறுவோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஒருவர் தாமாக முன்வந்து மதம் மாற விரும்பினால் 30 நாட்களுக்கு முன்னதாக மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்து அதற்கு அனுமதி பெற வேண்டும்.
அவ்வாறு விண்ணப்பிக்கும் நபரின் மதமாற்றம் குறித்து தகவல் பலகையில் ஆட்சேபனை கேட்டு அறிவிப்பு வெளியிடப்படும். அதில் யாருக்காவது ஆட்சேபனை ஏற்பட்டால் அதுபற்றி விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணையில் மதம் மாற்றம் சட்டவிரோதமாக நடைபெற்று இருப்பது உறுதியானால், அந்த நபர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிடுவார். இவ்வாறு பல்வேறு விதிமுறைகள் அவசர சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
Related Tags :
Next Story