சேலத்தில் இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை


சேலத்தில் இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை
x
தினத்தந்தி 18 May 2022 7:33 AM IST (Updated: 18 May 2022 7:33 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

சேலம்:
சேலத்தில் இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
பலத்த மழை
சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மேட்டூர், ஆத்தூர், ஏற்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சேலத்தில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்தது. இதனால் வெயிலின் அளவு 94.6 டிகிரியாக பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை அரைமணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. பின்னர் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையினால் மாநகரில் பல்வேறு இடங்களில் சாக்கடை கழிவுநீருடன் மழை நீர் கலந்து வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியுற்றனர்.
சங்ககிரி, எடப்பாடி
சங்ககிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. 4 மணி முதல் 5 மணி வரை அவ்வப்போது விட்டு விட்டு கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியது. பிறகு படிப்படியாக மழைநீர் வடிந்தது. இந்த திடீர் மழையால் குளுகுளு சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
எடப்பாடி, பூலாம்பட்டி, கொங்கணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரத்தில் திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. 
இதனால் கவுண்டம்பட்டி, வெள்ளாண்டிவலசு, கா.புதூர் ஆகிய தாழ்வான பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தவாறு சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மழை அளவு
மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக மேட்டூரில் 50.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஆத்தூர்-32.8, ஏற்காடு-16, வீரகனூர்-14, கெங்கவல்லி-8, கரியகோவில்-5, காடையாம்பட்டி-4.3, தம்மம்பட்டி-4, ஓமலூர்-2, பெத்தநாயக்கன்பாளையம்-2, எடப்பாடி-1.2.

Next Story