டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிர ஆலோசனை


டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிர ஆலோசனை
x

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக டெல்லியில் நேற்று காங்கிரஸ் தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தினார்கள். மேலும் 20 பேர் மந்திரிகளாக பதவி ஏற்க இருப்பதாகவும், நாளை மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 தொகுதியில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.

மந்திரிசபை விரிவாக்கம்

முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் உள்ளனர். இதுதவிர 8 மந்திரிகள் பதவி ஏற்றுள்ளனர். இதுவரை எந்த மந்திரிகளுக்கும் துறைகள் ஒதுக்கப்படவில்லை. ஏற்கனவே முதல்-மந்திரி பதவி யாருக்கு வழங்குவது என்று காங்கிரஸ் மேலிட தலைவர்கள் 4 நாட்கள் ஆலோசித்து இறுதியில் டி.கே.சிவக்குமாரை சமாதானப்படுத்தி முதல்-மந்திரி பதவியை சித்தராமையாவுக்கு வழங்கினார்கள்.

இந்த நிலையில், மந்திரிசபை விரிவாக்கம் செய்ய காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தார்கள். மந்திரிசபையில் மொத்தம் 34 இடங்கள் உள்ளன. அதில், முதல்-மந்திரியுடன் சேர்த்து 10 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளது. மீதம் 24 இடங்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் தனித்தனியாக விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றிருந்தார்கள்.

கே.சி.வேணுகோபாலுடன் ஆலோசனை

மந்திரி பதவியை எதிர்பார்த்துள்ள எம்.எல்.ஏ.க்களும் டெல்லிக்கு படையெடுத்து, அங்கு முகாமிட்டு உள்ளனர். நேற்று முன்தினம் இரவே மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுடன் முதல்-மந்திரி சித்தராமையா, டி.கே.சிவக்குமார் முதற்கட்ட ஆலோசனை நடத்தி இருந்தார்கள்.

இந்த நிலையில், நேற்று 2-வது நாளாக டெல்லியில் உள்ள வேணுகோபால் வீட்டில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார், கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆலோசனை நடத்தி இருந்தார்கள்.

அப்போது சித்தராமையா, டி.கே.சிவக்குமார் தனித்தனியாக மந்திரிசபையில் இடம் பெற வேண்டிய தங்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்கி இருந்தனர். அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அதனை கருத்தில் கொண்டு மந்திரிசபை விரிவாக்கம் செய்யவும், சாதி மற்றும் மாவட்டங்கள் வாரியாக மந்திரிகளை நியமிக்கவும் காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது.

மூத்த தலைவர்களுக்கு பதவி?

குறிப்பாக லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதன் மூலம், நாடாளுமன்ற தேர்தலில் அந்த சமூகத்தினரின் ஓட்டு பா.ஜனதாவுக்கு செல்லாமல் காங்கிரசுக்கு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஏற்கனவே அந்த சமுதாயத்தை சேர்ந்த எம்.பி.பட்டீலுக்கு மந்திரி பதவி கிடைத்திருப்பதால், இன்னும் 5 முதல் 6 பேருக்கு லிங்காயத் சமூகத்தினருக்கு மந்திரி பதவி வழங்க காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுபோல், ஒக்கலிகர், எஸ்.சி, எஸ்.டி. சமூகத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் மந்திரிசபையில் முக்கியத்துவம் கொடுக்க காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், மூத்த தலைவர்களுக்கு மந்திரிசபையில் வாய்ப்பளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து கே.சி.வேணுகோபால் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. சித்தராமையா ஆதரவாளர்கள் பெரும்பாலும் மூத்த தலைவர்களாக உள்ளனர்.

டி.கே.சிவக்குமார் எதிர்ப்பு

அவர்கள், தங்களது கடைசி தேர்தல் எனக்கூறி வெற்றி பெற்றிருந்தனர். அதாவது சித்தராமையா ஆதரவாளர்களான ஆர்.வி.தேஷ்பாண்டே, எச்.கே.பட்டீல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சித்தராமையா கூறுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் கடைசி தேர்தல் என்று போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், மந்திரி பதவியில் இருந்துவிட்டு அரசியலில் இருந்து விலகுவதால், காங்கிரசுக்கு என்ன பயன், அடுத்த சட்டசபை தேர்தலில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று டி.கே.சிவக்குமார் கூறுவதாக சொல்லப்படுகிறது.

அதாவது மூத்த தலைவர்களுக்கு பதில் இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தால், கட்சியை வளர்க்க முடியும் என்று டி.கே.சிவக்குமார் கூறி இருக்கிறார். இதனால் மந்திரிசபையில் யாருக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பதில் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் இடையே குழப்பம் நிலவியது. அத்துடன் கே.சி.வேணுகோபால் வீட்டில் நடைபெற்ற பேச்சு வார்த்தை நிறைவுக்கு வந்தது.

மல்லிகார்ஜுன கார்கே தலைமையில்...

மேலும் அங்கு எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, நேற்று மாலையில் மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மற்றொரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கே.சி.வேணுகோபால், சித்தராமையா, டி.கே.சிவக்குமார், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

அப்போது மேலும் 20 பேருக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரே ஒரு பெண் மந்திரியை மட்டும் நியமிக்கவும், லிங்காயத் சமூகத்தை சேர்ந்த லட்சுமி ஹெப்பால்கருக்கு மந்திரி பதவி வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

20 பேருக்கு மந்திரி பதவி

இதுதவிர மூத்த தலைவர்கள், இளைஞர்கள், சாதி, மாவட்டம் வாரியாக மற்ற 19 பேருக்கு மந்திரி பதவி வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டு, அதற்கான பட்டியலை காங்கிரஸ் தலைவர்கள் தயார் செய்துள்ளனர். அதாவது 4 இடங்களை காலியாக வைத்து விட்டு, 20 இடங்களுக்கு மட்டும் தற்போது மந்திரிசபையில் வாய்ப்பளிக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

அதிருப்தியில் இருக்கும் மற்றவர்களை சமாதானப்படுத்திவிட்டு, அந்த 4 இடங்களையும் நிரப்பலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில் மந்திரிசபை விரிவாக்கத்தை தள்ளி போடக்கூடாது என்று சித்தராமையா வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) 20 மந்திரிகளின் பெயர், இலாகா விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியாகலாம் என்றும், நாளை (சனிக்கிழமை) மந்திரிகள் பதவி ஏற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நீர்ப்பாசனத்துறைக்கு மோதல்

காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் எந்த மந்திரிகளுக்கு, எந்த துறையை ஒதுக்குவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பின்பு தான் ஏற்கனவே பதவி ஏற்றுள்ள 8 பேருக்கும் துறைகள் ஒதுக்கப்படும் என்று டி.கே.சிவக்குமார் கூறி இருந்தார். அத்துடன் நீர்ப்பாசனத்துறைக்கு டி.கே.சிவக்குமார், எம்.பி.பட்டீல் இடையே மோதல் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. எம்.பி.பட்டீலுக்கு ஆதரவாக சித்தராமையா இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் மந்திரிகளுக்கு துறைகள் ஒதுக்குவது குறித்தும் நேற்று நடைபெற்ற கூட்டங்களில் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டு சில முடிவுகளை எடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. மந்திரிசபை விரிவாக்கம் காரணமாக கர்நாடக அரசியல் தற்போது டெல்லிக்கு இடம் பெயர்ந்துள்ளது. பெரும்பாலான தலைவர்கள் டெல்லியிலேயே முகாமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் யாருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் எம்.எல்.ஏ.க்கள் பரபரப்பாக இருந்து வருகின்றனர்.

பா.ஜனதா குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 13 நாட்கள் ஆகியுள்ள நிலையில் முதல்-மந்திரி தேர்வு 4 நாட்கள் இழுபறி நீடித்த நிலையில், தற்போது மந்திரி பதவி கேட்டும், முக்கிய இலாகாக்கள் கேட்டும் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் போர்க்கொடி தூக்கி வருவது காங்கிரஸ் கட்சி தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதற்கிடையே பா.ஜனதா கட்சி, காங்கிரஸ் அளித்த வாக்குறுதிபடி 5 உத்தரவாத திட்டங்களை நிறைவேற்ற கோரி மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். ஆனால் மந்திரி பதவி கேட்டு காங்கிரசார் டெல்லியில் சுற்றித்திரிவதாக கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.


Next Story