மராட்டியம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு


மராட்டியம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு
x

உத்தரபிரதேசத்தில் கோலகோகர்நாத் தொகுதிக்குட்பட்ட லக்கிம்பூரில் பெண்கள் வாக்களித்து விட்டு அடையாள மை வைக்கப்பட்ட விரலைக்காட்டி ‘செல்பி’ படம் எடுத்துக்கொண்டனர்.

புதுடெல்லி,

மராட்டிய மாநிலத்தில் அந்தேரி, பீகாரில் மோகாமா, கோபால்கஞ்ச், தெலுங்கானாவில் முனோகோடே, உத்தரபிரதேச மாநிலத்தில் கோலகோகர்நாத், அரியானா மாநிலத்தில் ஆதம்பூர், ஒடிசாவில் தாம்நகர் ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்தன.

இவற்றுக்கு நவம்பர் 3-ந்தேதி (நேற்று) இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இந்த 7 தொகுதிகளில் பா.ஜ.க.விடம் 3 தொகுதிகளும், காங்கிரசிடம் 2 தொகுதிகளும், சிவசேனா, ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகியவற்றிடம் தலா ஒரு தொகுதியும் இருந்தன.

பீகாரில் பா.ஜ.க.- ராஷ்டிரிய ஜனதாதளம் இடையேயும், அரியானாவில் பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸ், இந்திய தேசிய லோக்தளம், ஆம் ஆத்மி கட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. தெலுங்கானா, உத்தரபிரதேசம், ஒடிசாவில் பா.ஜ.க.வுக்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி, சமாஜ்வாடி, பிஜூ ஜனதாதளம் ஆகியவை போட்டியாக உள்ளன.

7 தொகுதிகளிலும் காலையில் வாக்குப்பதிவு மெதுவாகவே தொடங்கினாலும், மதியத்துக்கு பிறகு சற்று விறுவிறுப்படைந்தது. 3 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தெலுங்கானாவில் முனோகோடேவில் 59.92 சதவீதமும், அரியானாவில் ஆதம்பூரில் 55.12 சதவீதமும், ஒடிசாவில் தாம்நகரில் 52.13 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் கோலகோகர்நாத்தில் 44.05 சதவீதமும், பீகாரில் மோகாமாவில் 42.44 சதவீதமும, கோபால்கஞ்சில் 42.65 சதவீதமும் பதிவாகின.

மராட்டியத்தின் அந்தேரி கிழக்கில் மட்டும் மிகக்குறைந்த அளவாக 22.85 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு முடிந்தபோது, பெரும்பாலான தொகுதிகளில் 70 சதவீதத்துக்கும் மேலாக வாக்குகள் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்கு எண்ணிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை (6-ந்தேதி) நடக்கிறது.


Next Story