பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ஒரு கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி பறிமுதல்
குடகில் நடந்த லோக் அயுக்தா சோதனையில் பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ஒரு கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குடகு:
லோக் அயுக்தா சோதனை
மைசூரு, குடகை சேர்ந்த 7 அரசு அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகாரை தொடர்ந்து, கடந்த 21-ந்தேதி அவர்களின் வீடு, அலுவலகங்கள், உறவினர்களின் வீடுகளில் லோக் அயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் ெசய்தனர். மேலும் அவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தெரியவந்தது.
இந்த நிலையில், அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட நகை விவரம் குறித்து லோக் அயுக்தா அதிகாரிகள் ெவளியிட்டுள்ளனர்.
ஒரு கிலோ தங்கம்
அதில், மடிகேரியை சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரி டி.நாகராஜிடம் இருந்து ஒரு கிலோ 86 கிராம் தங்கம், 9 கிலோ 928 கிராம் வெள்ளி, ரூ.23.91 லட்சம் ரொக்கம், 2 கார்கள், ஒரு ஸ்கூட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், சிறிய நீர்ப்பாசனத்துறை என்ஜினீயர் ரபீக்கிற்கு சொந்தமான குஷால்நகர் வீட்டில் இருந்து 680 கிராம் தங்கம், 250 கிராம் ெவள்ளி, ரூ.2.82 லட்சம் ரொக்கம் மற்றும் 2 ஏக்கர் நிலம், ஒரு கார், ஒரு ஜீப், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் குஷால்நகரை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேசிடம் இருந்து 200 கிராம் தங்கம், 2 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லோக் அயுக்தா போலீசார் தெரிவித்துள்ளனர்.