சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு மாறாக 3-ல் ஒரு போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லை - பரபரப்பு தகவல்


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு மாறாக 3-ல் ஒரு போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லை - பரபரப்பு தகவல்
x

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு மாறாக 3-ல் ஒரு போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

புதுடெல்லி,

போலீஸ் நிலையங்களில் சி.சி.டி.வி என்று அழைக்கப்படுகிற ரகசிய கண்காணிப்பு கேமராக்களை கண்டிப்பாக பொருத்தி இருக்க வேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு ஆகும்.

ஆனால், அதற்கு மாறான நிலைதான் நிலவுகிறது என்பதை நாட்டின் போலீஸ் படையை பற்றி ஆய்வு செய்துள்ள 'இந்திய நீதி அறிக்கை, போலீஸ் துறை: மேம்பாடுகள், குறைபாடுகள் மற்றும் தேசிய போக்குகள்- போலீஸ் அமைப்பு 2021 பற்றிய தரவுகளின் பகுப்பாய்வு' அறிக்கை காட்டுகிறது.

அந்த அறிக்கையில், 17 ஆயிரத்து 233 போலீஸ் நிலையங்களில், 5 ஆயிரத்து 396 போலீஸ் நிலையங்களில் ஒரு ரகசிய கண்காணிப்பு கேமரா கூட இல்லை என கூறப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 3-ல் ஒரு போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லை.

ஒடிசா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் மட்டுமே எல்லா போலீஸ் நிலையங்களிலும் குறைந்தபட்சம் ஒரே ஒரு ரகசிய கண்காணிப்பு கேமராவாவது உள்ளது என கூறப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 894 போலீஸ் நிலையங்களுக்கு ஒரு போலீஸ் நிலையத்தில் மட்டுமே ரகசிய கண்காணிப்பு கேமரா உள்ளது. மணிப்பூர், லடாக், லட்சத்தீவு ஆகியவற்றில் ஒரு போலீஸ் நிலையத்திலும் ரகசிய கண்காணிப்பு கேமரா கிடையாது என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் நாட்டில் 2010-20 ஆண்டுகளுக்கு இடையே இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் போலீஸ் படைகள் 32 சதவீத வளர்ச்சி கண்டுள்ளபோதும், பெண்களின் பங்களிப்பு 33 சதவீதத்துக்கு பதிலாக 10.5 சதவீதமாக இருக்கிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Next Story