பல் டாக்டர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை...
தாவணகெரேவில் பல் டாக்டர் வீட்டில் ரூ.10 லட்சம் வைரம், தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
சிக்கமகளூரு,
தாவணகெரே டவுன் டாலர்ஸ் காலனியை சேர்ந்தவர் திப்பேசாமி. பல் டாக்டரான இவர், அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவர் வேலை விஷயமாக குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் இவரது வீட்டில் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த வைரம், தங்கம், வெள்ளி, நகைகளை திருடி சென்றனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக வீட்டின் கதவு திறந்து கிடந்தது.
நேற்று முன்தினம் காலை திம்பேசாமி திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சந்தேகத்தில் வீட்டினுள் சென்று பார்த்தார். அங்கு பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. இதையடுத்து திப்பேசாமி பீரோவை சோதனை செய்தார். அப்போது மர்ம நபர்கள் பீரோவில் இருந்த நகைகள் அனைத்தையும் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்து திப்பேசாமி, தாவணகெரே டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான வைரம், தங்கம், வெள்ளி நகைகளை திருடி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து திப்பேசாமி கொடுத்த புகாரின் பேரில் தாவணகெரே டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.