விளைநிலங்களுக்குள் 10 காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் -ரூ.20 லட்சம் பயிர்கள் நாசம்


விளைநிலங்களுக்குள் 10 காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம்  -ரூ.20 லட்சம் பயிர்கள் நாசம்
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பங்காருபேட்டை அருகே தமிழக எல்லையில் அமைந்துள்ள விளைநிலங்களுக்குள் 10-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன. அவைகள் ரூ.20 லட்சம் மதிப்பிலான பயிர்களை நாசப்படுத்தின.

கோலார் தங்கவயல்:

காட்டுயானைகள் அட்டகாசம்

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா காமசமுத்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 13-க்கும் மேற்பட்ட கிராமங்கள் கர்நாடகா-தமிழக எல்லையில் அமைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக தமிழக வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் கர்நாடக எல்லையில் உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விளைப்பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தமிழக வனப்பகுதியிலிருந்து சுமார் 10-க்கும மேற்பட்ட காட்டு யானைகள் காமசமுத்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்குள் நுழைந்து அங்கு சாகுபடி செய்திருந்த விளைப்பயிர்களை நாசப்படுத்தின.

விளைப்பயிர்கள் நாசம்

வெங்டேஷப்பா, கிருஷ்ணமூர்த்தி, சந்தோஷ், மஞ்சுநாத், சங்கரமூர்த்தி உள்பட பல்வேறு விவசாயிகளுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்திருந்த கேழ்வரகு, தக்காளி, துவரை, கம்பு, சோளம், பப்பாளி உள்ளிட்ட ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான பயிர்களை காட்டுயானைகள் நாசப்படுத்தின.

நேற்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் விளை நிலங்களுக்கு சென்றனர். அப்போது விளைப்பயிர்கள் நாசமாகியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் விவசாயிகள் சங்க தலைவர் பசவராஜ் மற்றும் நிர்வாகிகளுடன் சேர்ந்து பங்காருபேட்டை வனத்துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.

நிவாரண நிதி

அதில், 'விளைநிலங்களுக்குள் காட்டுயானைகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவோம்' என்று கூறியிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வனத்துறையினர் காட்டுயானைகளை தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசிடம் இருந்து உரிய நிவாரண நிதி பெற்று தருவதாகவும் கூறினர். அதை ஏற்ற விவசாயிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


Next Story