மங்களூருவில் விற்பனை செய்ய இருந்த 100 கிலோ போதை சாக்லெட் பறிமுதல் -2 பேர் கைது
மங்களூரு அருகே பெட்டிக்கடைகளில் விற்க வைத்திருந்த 100 கிலோ போதை சாக்லெட்டை பறிமுதல் செய்த போலீசார், வடமாநில வாலிபர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
மங்களூரு:-
பெட்டிக்கடைகளில் சோதனை
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை அடுத்த பாண்டேஸ்வர் பகுதியில் பெட்டிக்கடைகளில் போதை சாக்லெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதுகுறித்து பாண்டேஸ்வர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாண்டேஸ்வர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
அதன்படி முதற்கட்டமாக பாண்டேஸ்வரை அடுத்த கார் ஸ்ரிட் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் போதை சாக்லெட்டுகள் விற்பனை செய்வது தெரியவந்தது. அதை போலீசார் கைப்பற்றி ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பெட்டிக்கடையின் உரிமையாளர் மனோகர் சேட் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல பழநீர் பகுதியில் உள்ள கடையில் போலீசார் போதை சாக்லெட் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர்.
100 கிலோ போதை சாக்லெட் பறிமுதல்
அப்போது அங்கு உத்தரபிரதேசத்தை சேர்ந்த பச்சன் ஷோங்கர் என்பவர் போதை சாக்லெட் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த போதை சாக்லெட்டை பறிமுதல் செய்தனர். மொத்தம் 2 கடைகளிலும் சேர்த்து 100 கிலோ போதை சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் சில சாக்லெட்டுகளை தடய அறிவியல் ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த தடயவியல் அறிக்கை வந்த பின்னர், சாக்லெட்டில் எந்தெந்த போதை பொருட்கள் கலக்கப்பட்டுள்ளது என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கைதான 2 பேரிடம் இந்த போதை சாக்லெட்டை எங்கிருந்து வாங்கினார்கள், யார், யாருக்கு விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து போலீசார் கூறுகையில், சிறுவர்கள், பள்ளி மாணவர்களுக்கு இந்த சாக்லெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் 100 கிலோ சாக்லெட்டுகளை பறிமுதல் செய்துள்ளோம்.
இந்த சாக்லெட்டில் இதுவரை எவ்வளவு போதை பொருட்களை சேர்த்துள்ளனர் என்பது தெரியவில்லை. பல வகையான போதை பொருட்கள் கலப்படம் செய்திருக்க கூடும் என்று கருதப்படுகிறது. தடய அறிவியல் ஆய்வு அறிக்கை வந்த பின்னர் முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் கூறியுள்ளனர்.