மராட்டியத்தில் லம்பி தோல் நோயால் 126 கால்நடைகள் பலி! பசுவின் பால் மூலமாக மனிதர்களுக்கு நோய் பரவாது: கால்நடை பராமரிப்புத்துறை
விலங்குகள் மூலமாகவோ அல்லது பசுவின் பால் மூலமாகவோ மனிதர்களுக்கு லம்பி தோல் நோய் பரவுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தை கால்நடை லம்பி தோல் தொற்று நோய் அச்சுறுத்தி வருகிறது.மராட்டிய மாநிலத்தில் அதிகரித்து வரும் கால்நடை தோல் நோயைக் கட்டுப்படுத்த மாநில அளவிலான செயற்குழுவை மாநில அரசு உருவாக்கியுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் லம்பி வைரஸ் தோல் நோயால் 126 கால்நடைகள் இறந்துள்ளன என்றும் மாநிலத்தில் 25 மாவட்டங்களில் லம்பி வைரஸ் நோயால் லம்பி வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன மாநில கால்நடை பராமரிப்புத் துறை நேற்று தெரிவித்தது.
மராட்டிய அரசு சார்பில் ஐஏஎஸ் அதிகாரி சசீந்திர பிரதாப் சிங் கூறுகையில், "அதிகபட்சமாக ஜல்கான் மாவட்டத்தில் 47 கால்நடைகள் லம்பி தோல் நோயால் இறந்துள்ளன.
லம்பி தோல் நோய் (எல்.எஸ்.டி) வேகமாகப் பரவுகிறது என்றாலும், விலங்குகள் மூலமாகவோ அல்லது பசுவின் பால் மூலமாகவோ மனிதர்களுக்கு இது பரவுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
கால்நடை பராமரிப்புத் துறையின் அறிக்கைப்படி, இந்த சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை வாங்குவதற்கு மாவட்டத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தோல் நோய் பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்துள்ளன. மொத்தம் 1.80 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். அவற்றில் சுமார் இதுவரை 1.40 லட்சத்துக்கும் அதிகமான விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஈக்கள், கொசுக்கள், உண்ணிகள் மூலம் நோய் பரவி வருவதால், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க கிராம பஞ்சாயத்துகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.