பெங்களூருவில் ரூ.13 கோடி திமிங்கல உமிழ்நீர் பறிமுதல்; திருச்சியை சேர்ந்த 2 பேர் கைது


பெங்களூருவில் ரூ.13 கோடி திமிங்கல உமிழ்நீர் பறிமுதல்; திருச்சியை சேர்ந்த 2 பேர் கைது
x

பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.13 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு திருச்சியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:

திருச்சியை சேர்ந்தவர்கள் கைது

பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவர்களிடம் சோதனை நடத்திய போது திமிங்கல உமிழ்நீர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை விற்பனை செய்ய 2 பேரும் சுற்றி திரிவதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் 2 பேரும் தமிழ்நாடு திருச்சியை சேர்ந்த செல்வராஜ் (வயது 34), ஹரிகரன் (24) என்பதும், தமிழ்நாட்டில் இருந்து திமிங்கல உமிழ்நீரை பெங்களூருவுக்கு சட்டவிரோதமாக கடத்தி வந்து, தங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு விற்பனை செய்வதற்காக காத்திருந்ததும் தெரியவந்தது.

ரூ.13 கோடி திமிங்கல உமிழ்நீர்

கைதான 2 பேரிடமும் இருந்து 6½ கிலோ எடை கொண்ட திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் ஒரு கிலோ திமிங்கல உமிழ்நீர் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், வாசனை திரவியங்கள் உள்ளிட்டவை தயாரிக்க இந்த திமிங்கல உமிழ்நீர் பயன்படுத்தப்படுவதால், கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட 6½ கிலோ திமிங்கல உமிழ்நீரின் மதிப்பு ரூ.13 கோடி இருக்கும் என்றும் மத்திய குற்றப்பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைதான திருச்சியை சேர்ந்த 2 பேர் மீதும் வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story