சத்தீஷ்காரில் யானைக்குட்டியை விஷம் வைத்து கொன்ற 13 பேர் கைது
சத்தீஷ்கார் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் வனபகுதியில் பனியா என்ற கிராமம் உள்ளது.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் வனபகுதியில் பனியா என்ற கிராமம் உள்ளது. அங்கு வயல்வெளி பகுதிக்கு தவறி வந்த ஒரு யானைக்குட்டியை சிலர் விஷம் வைத்து கொன்றனர். பின்னர் அதை மறைப்பதற்காக வயலில் குழி தோண்டி புதைத்தனர். அதன் மீது நாற்றுகளையும் நட்டுவிட்டனர்.
இந்நிலையில் அந்த யானைக்குட்டி சார்ந்த 44 யானைகள் அடங்கிய கூட்டம், சீற்றம் அடைந்து பக்கத்து கிராமத்தில் புகுந்தது. அங்கு ஒரு நபரையும், 3 கால்நடைகளையும் தாக்கி கொன்றது.
இதற்கிடையில் யானைக்குட்டி கொன்று புதைக்கப்பட்ட தகவல் அறிந்த வனத்துறையினர், அதன் உடலை தோண்டி எடுத்தனர்.
யானைக்குட்டிக்கு விஷம் வைத்தது தொடர்பாக 16 வயது சிறுவன் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் யானை தாக்கி 210 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதேவேளையில், மின்சார வேலியில் சிக்கியது உள்பட பல்வேறு காரணங்களால் கடந்த 4 ஆண்டுகளில் 47 யானைகள் பலியாகியுள்ளன.