பெங்களூருவில் கல்லூரிகள் அருகே போதைப்பொருட்கள் விற்ற 13 பேர் கைது


பெங்களூருவில் கல்லூரிகள் அருகே போதைப்பொருட்கள் விற்ற 13 பேர் கைது
x

பெங்களூருவில் பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருட்கள் விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போதைப்பொருட்கள் பயன்படுத்திய 172 பேர்மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

பெங்களூரு:

மாணவர்கள் பயன்படுத்துவதை...

பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில போலீஸ் டி.ஜி.பி. அலோக்மோகன் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், அதன் அருகே போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கவும், மாணவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய போலீஸ் கமிஷனர் தயானந்த் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, நேற்று முன்தினத்தில் இருந்து பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கும்பல் மற்றும் பயன்படுத்துவோரை தீவிரமாக கண்காணித்து, அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

3 வியாபாரிகள் கைது

அதன்படி, பெங்களூரு மத்திய மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக 3 வியாபாரிகள் கைதாகி இருந்தனர். இதுபோல், போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக 18 பேர் போலீசாரிடம் சிக்கி இருந்தார்கள்.

இதையடுத்து, 21 பேர் மீதும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கைதான 3 வியாபாரிகளிடம் இருந்து 11 கிராம் எம்.டி.எம்.ஏ, 7 கிராம் ஹைட்ரோ கஞ்சா, 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

164 பேர் சிக்கினர்

இதுபோல், மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் லட்சுமண் நிம்பரகி தலைமையில் நேற்றும், நேற்று முன்தினமும் நடத்தப்பட்ட சோதனையில் 164 பேர் சிக்கி இருந்தார்கள். அவர்களில் 10 பேர் போதைப்பொருட்கள் விற்பனையாளர்கள் ஆவார்கள். மற்ற 154 பேர் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக போலீசார் பிடித்திருந்தனர். கைதான 164 பேர் மீதும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளது. வியாபாரிகள் 10 பேரிடம் இருந்து 11 கிலோ கஞ்சா மற்றும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைதான 13 வியாபாரிகளையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக கைதான 172 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story