தங்கையிடம் தவறாக நடக்க முயன்ற 17 வயது சிறுவன்: தட்டிக்கேட்ட 13 வயது சிறுவன் கொடூரக்கொலை - காரைக்காலில் பயங்கரம்
தங்கையிடம் தவறாக நடக்க முயன்ற 17 வயது சிறுவனை தட்டிக்கேட்ட 13 வயது சிறுவன் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால்,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலு. இவரது மகன் ரகு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 13 வயதான ரகு 8ம் வகுப்பு படித்து வந்தார். சிறுவன் நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது மாயமானார். சிறுவனின் பெற்றோர் உறவினர்கள் சிறுவனை தெரு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. அதேவேளை, பக்கத்து வீடு வழக்கத்திற்கு மாறாக பூட்டியிருந்தது. இதனால் சந்தேகமடைந்த சிங்காரவேலு மற்றும் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் பூட்டியிருந்த வீட்டின் உள்ளே எட்டிப்பார்த்தனர். அப்போது, அங்கு சிறுவன் ரகு கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளான்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அந்த வீட்டில் சிறுவன் ரகு கழுத்து அறுக்கப்பட்டு முகம், நெஞ்சு உள்பட 17 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அந்த வீட்டை சோதனை நடத்தியதில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கூர்மையான கத்தி கைப்பற்றப்பட்டது.
விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், சிறுவன் ரகுவை கொடூரமாக கொன்று உடலை வீட்டில் மறைத்துவைத்து விட்டு தலைமறைவான பக்கத்து வீட்டில் வசித்து வந்த 17 வயது சிறுவன் மற்றும் அவரது தாயாரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் தீவிர தேடுதலுக்கு பின் மயிலாடுதுறையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த 17 வயது சிறுவனையும் அவரது தாயாரையும் காரைக்கால் போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவன் மற்றும் அவரது தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட ரகுவின் தங்கையிடம் 17 வயது சிறுவன் தவறாக நடக்க முயற்சித்துள்ளான். அதை சிறுவன் ரகு தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த 17 வயது சிறுவன் ரகுவை கொடூரமாக கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுவன் ரகு கொலை செய்ய 17 வயது சிறுவனின் தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, கொலை செய்யப்பட்ட சிறுவன் ரகுவை கைதான 17 வயது சிறுவன் தவறான கண்ணோடத்தில் அழைத்தபோது ஏற்பட்ட தகறாரில் இந்த கொலை நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தங்கையிடம் தவறாக நடக்க முயன்ற 17 வயது சிறுவனை தட்டிக்கேட்ட 13 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் காரைக்காலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.