14 கும்கி யானைகள் மத்திய பிரதேசத்துக்கு செல்கின்றன


14 கும்கி யானைகள் மத்திய பிரதேசத்துக்கு செல்கின்றன
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் இருந்து 14 கும்கி யானைகளை மத்திய பிரதேச மாநிலத்துக்கு அனுப்பி வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

குடகு:-

மத்திய பிரதேச மாநிலம்

கர்நாடகத்தில் உள்ள யானைகள் முகாம்களில் இருந்து 14 கும்கி யானைகள் மத்திய பிரதேச மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் இருமாநில வனத்துறைக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. கர்நாடகத்தில் உள்ள யானைகள் முகாம்களில் நெருக்கடி அதிகமாக இருப்பதாலும், யானைகளை பராமரிக்க போதுமான நிதி இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாலும் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த கும்கி யானைகள் கர்நாடகத்தில் நடைபெறும் தசரா விழாக்கள், புலி மற்றும் காட்டுயானைகளை பிடிக்கும் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன.

14 கும்கி யானைகள்

கர்நாடகத்தில் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள சக்கரேபைலு யானைகள் முகாம், குடகு மாவட்டத்தில் உள்ள துபாரே யானைகள் முகாம் மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திப்பூர் வனப்பகுதியில் உள்ள ராம்புரா யானைகள் முகாம் ஆகிய முகாம்களில் இருந்து இந்த 14 கும்கி யானைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இதில் குடகு மாவட்டத்தில் உள்ள துபாரே யானைகள் முகாமில் இருந்து ஜெனரல் திம்மய்யா(வயது 8), ஜெனரல் கார்யப்பா(8), வள்ளி(ஆண், 40), லவா(21), மாருதி(ஆண், 20) ஆகிய யானைகள் அனுப்பி வைக்கபட இருக்கின்றன.

தற்போது இந்த யானைகள் முகாமில் 32 யானைகள் உள்ளன. மேற்கண்ட 5 யானைகளை அனுப்பி வைப்பதன் மூலம் துபாரே முகாமில் யானைகளின் எண்ணிக்கை 27 ஆக குறையும்.

சக்கரேபைலு முகாம்

இதுபோல் பந்திப்பூர் வனப்பகுதியில் அமைந்திருக்கும் ராம்புரா யானைகள் முகாமில் இருந்து கணேஷா(17), கிருஷ்ணா(21), கஜா(7), மர்ஷியா(7), பூஜா(9) ஆகிய யானைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. தற்போது இந்த முகாமில் 19 யானைகள் உள்ளன. மேற்கண்ட 5 யானைகளும் அனுப்பி வைக்கப்பட்டால் இங்குள்ள யானைகளின் எண்ணிக்கை 14 ஆக குறையும்.

மேலும் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள சக்கரேபைலு யானைகள் முகாமில் இருந்து ரவி(25), சிவா(6), மணிகண்டா(35), பெங்களூரு கணேஷா(36) ஆகிய 4 யானைகள் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன. தற்போது இங்குள்ள யானைகளின் எண்ணிக்கை 19 ஆகும். 4 இந்த யானைகளும் அனுப்பி வைக்கப்பட்டால், இங்குள்ள யானைகளின் எண்ணிக்கை 15 ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

70 யானைகள்...

இந்த யானைகளுக்கு பதிலாக மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து யானைகளோ, பிற வனவிலங்குகளோ இங்கு வரவழைக்கப்படவில்லை.இதுபற்றி வனத்துறை அதிகாரி மூர்த்தி கூறுகையில், 'குடகு மாவட்டத்தில் துபாரே, ஹாரங்கி, மத்திகோடு, பீமகட்டே, பல்லே ஆகிய இடங்களில் யானைகள் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் 70 காட்டுயானைகள் இருக்கின்றன. தற்போது கர்நாடகத்தில் உள்ள யானை முகாம்களில் நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாலும், பராமரிக்க போதுமான நிதி இல்லாததாலும் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது' என்று கூறினார்.


Next Story