ரூ.7¾ கோடி போதைப்பொருள் கடத்திய வழக்கில் வெளிநாட்டினர் உள்பட 14 பேர் கைது


ரூ.7¾ கோடி போதைப்பொருள் கடத்திய வழக்கில் வெளிநாட்டினர் உள்பட 14 பேர் கைது
x
தினத்தந்தி 17 Sept 2023 12:15 AM IST (Updated: 17 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் இருந்து கடத்தி வந்து பெங்களூருவில் விற்க முயன்ற ரூ.7¾ கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வெளிநாட்டினர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:-

போதைப்பொருள் விற்பனை

பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கியிருந்து போதைப்பொருட்களை விற்பனை செய்கின்றனர். இதுதொடர்பாக ஏற்கனவே வெளிநாட்டினர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் போதைப்பொருட்கள் நடமாட்டம் பெங்களூருவில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக 14 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

14 பேர் கைது

அந்த தகவலின்பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொண்டனர். இந்த நிலையில் வித்யாரண்புரா, பனசங்கரி, காட்டன்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்றதாக 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் இதில் நைஜீரியாவை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் உள்பட 3 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் மும்பையில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி வந்து பெங்களூருவில் விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.

ரூ.7¾ கோடி

பிரான்சிஸ் கடந்த 2012-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்ததும், பின்னர் பெங்களூருவில் சட்டவிரோதமாக தங்கி போதைப்பொருட்களை விற்பனை செய்ததும் தெரிந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து கொகைன், எம்.டி.எம்.ஏ., மெபட்டிரோன் உள்பட 8 வகையான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக அவர்களிடம் இருந்து ரூ.7¾ கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குற்றப்பிரிவு போலீசார் கூறி உள்ளனர்.

விலை உயர்ந்த மெபட்டிரோன்

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இதனை போலீஸ் கமிஷனர் தயானந்த் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூருவில் போதைப்ெபாருட்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுபோல் பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.7¾ கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

9 வழக்குகள் பதிவு

இதில் பறிமுதல் செய்யப்பட்ட மெபட்டிரோன் எனப்படும் போதைப்பொருள் பெங்களூருவில் சிக்கியது இதுவே முதல் முறையாகும். இது மிகவும் விலை உயர்ந்த போதைப்பொருள் ஆகும். ஒரு கிராம் மெபட்டிரோன் ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

கைதான ஒருவரிடம் மட்டும் இருந்து ரூ.3¾ கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 14 பேர் மீதும் வித்யாரண்புரா, காட்டன்பேட்டை உள்ளிட் போலீஸ் நிலையங்களில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story