ஒற்றைக் காலில் குதித்தவாறே 2 கிமீ பயணம்; பள்ளிக்கு சென்றதும் அதிகம் வியர்க்கும் - மாற்றுத் திறனாளி சிறுவனின் சோக கதை!


ஒற்றைக் காலில் குதித்தவாறே 2 கிமீ பயணம்; பள்ளிக்கு சென்றதும் அதிகம் வியர்க்கும் - மாற்றுத் திறனாளி சிறுவனின் சோக கதை!
x

2 கிமீ தூர பள்ளிக்கூடத்திற்கு, ஒற்றைக் காலில் நொண்டிக் குதித்தவாறே சென்று வரும் அன்றாட நிகழ்வு வீடியோவாக வெளியாகி உள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் விபத்தில் ஒரு காலை இழந்த 14 வயது மாற்றுத் திறனாளி சிறுவன், சுமார் 2 கிமீ தூரத்தில் அமைந்து இருக்கும் பள்ளிக்கூடத்திற்கு, தன்னுடைய ஒற்றைக் காலில் நொண்டிக் குதித்தவாறே சென்று வரும் அன்றாட நிகழ்வு சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பலர், சமூக ஊடகங்களில் அந்த வீடியோவைப் பகிர்ந்து, அந்த சிறுவனுக்கு உதவி கோரினர்.

அதற்கு பலன் கிடைத்துள்ளது. 'ஜெய்ப்பூர் பூட்' காலணி தயாரிப்பு நிறுவனத்தின் அமெரிக்க தலைவர் பிரேம் பண்டாரி, அந்த 14 வயது மாற்றுத் திறனாளி சிறுவனுக்கு இலவச செயற்கை கால் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

பர்வைஸ் என்ற 14 வயது மாற்றுத் திறனாளி சிறுவன், இளம் வயதிலேயே தனது இடது காலை ஒரு பெரிய தீ விபத்தில் இழந்தார். இவர் தற்போது நவ்காமில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அந்த சிறுவனின் கிராமத்தில் உள்ள பாழடைந்த சாலையின் காரணமாக, சமூக நலத்துறை அவருக்கு சக்கர நாற்காலியை வழங்கியிருந்தாலும், அதை பயன்படுத்த முடியவில்லை.

இது குறித்து சிறுவன் பர்வைஸ் கூறுகையில், "ஒரு காலில் பேலன்ஸ் செய்து கொண்டே தினமும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தை கடக்கிறேன். சாலைகள் சரியில்லை. செயற்கை கால் கிடைத்தால் என்னால் நடக்க முடியும். என் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற கனவு எனக்கு இருக்கிறது.

தினமும் 2 கிலோமீட்டர் நடந்தே எனது பள்ளிக்குச் செல்கிறேன். எனது பள்ளிக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. நடக்கவே சிரமமாக உள்ளதால் பள்ளியை அடைந்தவுடன் எனக்கு வியர்க்கிறது.

என் நண்பர்கள் ஒழுங்காக நடக்க முடியும் என்பதைப் பார்த்து நான் காயமடைகிறேன். இருப்பினும், எனக்கு வலிமை அளித்த அல்லாஹ்வுக்கு (கடவுளுக்கு) நன்றி கூறுகிறேன்.

எனது சிகிச்சைக்காக எனது தந்தை தனது சொத்தை விற்க வேண்டியதாயிற்று. பள்ளிக்கு எனது பயணத்தை எளிதாக்கும் முறையான செயற்கை மூட்டு அல்லது வேறு ஏதேனும் போக்குவரத்து முறையை எனக்கு வழங்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்.

பள்ளியை அடைந்த பிறகு நான் பிரார்த்தனை செய்கிறேன். எனக்கு கிரிக்கெட், வாலிபால் மற்றும் கபடி பிடிக்கும். எனது எதிர்காலத்தை வடிவமைக்க அரசு உதவும் என்று நம்புகிறேன். என் கனவுகளை அடைய எனக்குள் ஒரு நெருப்பு இருக்கிறது" என்று நம்பிக்கையுடன் கூறினார்.

பர்வைஸின் தந்தை, குலாம் அகமது ஹஜாம் கூறியதாவது, "எனது குழந்தை மிக இளம் வயதில் ஒரு பெரிய தீ விபத்தில் தனது காலை இழந்துவிட்டான். என் மனைவி இதய நோயாளி. நான் ஒரு ஏழை. அவரது சிகிச்சைக்கு என்னால் ரூபாய் 3 லட்சம் கொடுக்க முடியவில்லை. என்னால் ரூ. 50,000 மட்டுமே வாங்க முடிந்தது, எனது சொத்தை விற்க வேண்டியிருந்தது.

பார்வைஸின் எதிர்காலத்திற்கு உதவுமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன். அவன் படிப்பதில் வல்லவன், கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் கொண்டவன். அவன் எந்த தவறான செயலிலும் ஈடுபடவில்லை" என்று கூறினார்.

இன்றைய காலகட்டத்தில், ஆசிரியர்களை மதிக்காமல் ஒழுங்கீனமாக செயல்படும் மாணவர்கள் பலரும் பார்த்து கற்றுக்கொள்ளும் விதத்தில், சிறந்த முன்னுதாரணமாக பர்வைஸ் திகழ்கிறார். அவருடைய கனவு நிறைவேற வாழ்த்துக்கள்.


Next Story