அடிக்கடி விதிகளை மீறும் பி.எம்.டி.சி., கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள்: ரூ.1.40 கோடி அபராதம் செலுத்தாத அரசு போக்குவரத்து கழகம்


அடிக்கடி விதிகளை மீறும் பி.எம்.டி.சி., கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள்: ரூ.1.40 கோடி அபராதம் செலுத்தாத அரசு போக்குவரத்து கழகம்
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் பி.எம்.டி.சி. கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள் அடிக்கடி போக்குவரத்து விதிகளை மீறுவதால் ரூ.1.40 கோடி அபராதம் பாக்கி வைத்துள்ளது. அந்த தொகையை உடனடியாக செலுத்தும்படி சிறப்பு போலீஸ் கமிஷனர் சலீம், போக்குவரத்து கழகத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.

பெங்களூரு:

ரூ.1.40 கோடி அபராதம் பாக்கி

பெங்களூருவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இதுபோல், பெங்களூருவில் பி.எம்.டி.சி. மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்கள் போக்குவரத்து விதிமுறைகளை அடிக்கடி மீறுகிறது. டிரைவர்கள் சிக்னல்களை மதிக்காமல் செல்வது உள்ளிட்ட பல விதிமுறை மீறல்களில் ஈடுபடுவதால், அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அரசு பஸ்கள் விதிமுறைகளை மீறியதாக போக்குவரத்து போலீசாரால் ரூ.1.40 கோடி அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அபராதம் செலுத்தாமல் போக்குவரத்து கழகம் இருந்து வருவதால், அதனை உடனடியாக செலுத்தும்படி கோரி போக்குவரத்து கழகத்திற்கு சிறப்பு போலீஸ் கமிஷனர் சலீம் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

போக்குவரத்து நெரிசல்

பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்கள் நகரின் முக்கிய சாலைகளிலும், தடை செய்யப்பட்ட இடங்களிலும் நிறுத்தப்படுவதால், தேவையில்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அரசு பஸ்களை ஓட்டும் டிரைவர்கள் விதிமுறைகளை மீறி வருகின்றனர். இதுபற்றி பல முறை எச்சரித்தும் டிரைவர்கள் கண்டு கொள்வதில்லை.

சாலைகளில் முறையாகவும் அரசு பஸ்களை நிறுத்துவதில்லை. இதற்காக பி.எம்.டி.சி. பஸ்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ.1.30 கோடி கட்டாமல் போக்குவரத்து போலீசாருக்கு பாக்கி வைத்துள்ளனர். அந்த தொகையை உடனடியாக செலுத்தும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சம்பளத்தில் பிடித்தம்

இதுபோல், கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களும் போக்குவரத்து போலீசாருக்கு ரூ.10 லட்சம் அபராதம் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதால், அதனை செலுத்தும்படி கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்திற்கு, போக்குவரத்து போலீசார் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீஸ் சிறப்பு கமிஷனர் எழுதியுள்ள கடிதம் கிடைத்திருப்பதை பி.எம்.டி.சி. அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

பொதுவாக விதிமுறைகளை மீறும் பஸ்களை ஓட்டி செல்லும் டிரைவர்களின் சம்பளத்தில் இருந்து தான் பிடித்தம் செய்து, போலீசாருக்கு அபராதம் செலுத்தி வருவதாகவும், அதுபோல், தற்போதும் டிரைவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து அபராதம் செலுத்தப்படும் என்றும் பி.எம்.டி.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story