வருகிற 21-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் எதிரொலி; அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 15 சதவீத சம்பள உயர்வு - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு


வருகிற 21-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் எதிரொலி; அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 15 சதவீத சம்பள உயர்வு - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 15 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

சம்பள உயர்வு

கர்நாடக சட்டசபைக்கு இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் நேரத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் அரசு ஊழியர் சங்கங்கள் சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து தங்களின் வேலைகளை முடித்து கொள்கிறார்கள்.

முதலில் கர்நாடக அரசு ஊழியர்கள் சங்கம், சம்பள உயர்வு கோரி கடந்த 1-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியது. முதல் நாளே அவர்களுக்கு 17 சதவீத சம்பள உயர்வு வழங்குவதாக அரசு அறிவித்தது. அதற்கான உத்தரவும் அன்றைய தினமே பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதையடுத்து அவர்களுக்கு 20 சதவீத சம்பள உயர்வு வழங்குவதாக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டனர்.

போக்குவரத்து ஊழியர்கள்

அரசு போக்குவரத்து ஊழியர்கள் சம்பள உயர்வு வழங்க கோரி வருகிற 21-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதனால் மாநிலத்தில் 23 ஆயிரம் அரசு பஸ்களின் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வருகிற 20-ந் தேதிக்குள் சம்பள உயர்வு வழங்காவிட்டால், திட்டமிட்டப்படி 21-ந் தேதி முதல் வேலை நிறுத்தம் தொடங்கும் என்றும் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 15 சதவீதம் சம்பளம் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார். மின்வாரிய ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்த உத்தரவு இன்றே (நேற்று) பிறப்பிக்கப்படும் என்றும் முதல்-மந்திரி கூறினார். இந்த 15 சதவீத சம்பள உயர்வு முடிவை போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் ஏற்றுக்கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அரசு மும்முரம்

ஏனென்றால் அந்த சங்கத்தின் இன்னும் சில கோரிக்கைகளும் உள்ளன. அந்த கோரிக்கை குறித்து அரசு எதுவும் கூறவில்லை. தேர்தல் நேரத்தில் மாநில அரசை மிரட்டி அரசு ஊழியர் சங்கங்கள் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றி கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாத இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேதி அறிவித்த பிறகே மாநில அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது. அதனால் அதற்கு முன்னதாக பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை முடிந்தவரை நிறைவேற்றி அவர்களின் ஆதரவை பெறுவதில் பா.ஜனதா அரசு மும்முரமாக உள்ளது.

இதற்கு முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி சுதந்திர பூங்காவில் தொடர் தர்ணா நடத்தினர். அவர்களுக்கு பட்ஜெட்டில் ரூ.1,000 சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. அதே போல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தினர். அவர்களின் கோரிக்கையையும் அரசு நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.


Next Story