ஸ்கூட்டியில் சென்றவர்களிடம் திருட்டு முயற்சி - பின்னால் இருந்தவர்கள் கீழே விழுந்து சிறுவன் உள்பட 2 பேர் பலி
ஸ்கூட்டியில் பின்னால் இருந்தவர்கள் கீழே விழுந்ததில் டிராக்டர் ஏறியதில் 8 வயது சிறுவன், 21 வயது இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் ஹாஷிர்பூர் மாவட்டம் மைனி பகுதியில் நேற்று 40 வயது பெண் தனது 8 வயது மகன், 21 வயது உறவுக்கார பெண்ணுடன் ஸ்கூட்டியில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அந்த ஸ்கூட்டரை பைக்கில் பின் தொடர்ந்த 2 பேர் அந்த பெண் ஸ்கூட்டரில் வைத்திருந்த பர்சை (பணப்பை) திருட முயற்சித்தனர்.
பைக் திருடர்கள் பர்சை திருட முயற்சித்தபோது ஸ்கூட்டர் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில், ஸ்கூட்டரில் இருந்தவர்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது, சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த டிராக்டர் அந்த பெண்ணின் மகன் மீதும், உறவுக்கார பெண் மீதும் மோதியது. இந்த கோர விபத்தில் சிறுவனும், இளம்பெண்ணும் டிராட்கர் டயரில் சிக்கி பரிதாபமாக உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
ஸ்கூட்டரை ஓட்டிவந்த அந்த பெண் படுகாயமடைந்தார். அந்த திருடர்கள் ஸ்கூட்டரில் இருந்த பர்ச்சை திருடி சென்றனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.