கர்நாடகத்தில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு
கர்நாடகத்தில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.
பெங்களூரு:-
பெங்களூரு-மைசூரு இடையே 10 வழிச்சாலை திட்ட தொடக்க விழாவில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசியதாவது:-
விவசாயிகளுக்கு அநீதி
நாட்டின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் பெங்களூருவையும், கலாசார தலைநகர் மைசூருவையும் இந்த விரைவுச்சாலை திட்டம் இணைக்கிறது. இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரத்தில் செல்லும் வகையில் இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.8,480 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த விரைவுச்சாலையை அமைக்கும்போது பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டது. மாநில அரசின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கும்போது விவசாயிகளுக்கு அநீதி ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் 89 கீழ் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே தேவையான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விரைவுச்சாலையால் வேலை வாய்ப்புகள் பெருகப்போகிறது.
ரூ.3 லட்சம் கோடி முதலீடு
இந்த விரைவுச்சாலை பகுதிகளில் கர்நாடகத்தின் கைவினைப் பொருட்கள், சன்னபட்டணா பொம்மைகள், சாண்டல் சோப்புகள் உள்ளிட்ட உள்ளூர் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் அமைக்கப்படும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். சென்னை முதல் மைசூரு வரையிலான விரைவுச்சாலை திட்ட பணிகள் வருகிற டிசம்பர் மாதம் நிறைவடையும். பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறையும் வகையில் வெளிவட்டச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த திட்ட பணிகள் அடுத்த ஆண்டு (2024) மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும்.
கதி சக்தி திட்டத்தின் கீழ், பெங்களூரு-சென்னை விரைவுச்சாலையை காஷ்மீர் வரை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரு-சென்னை- சூரத் விரைவுச்சாலை திட்ட பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு வருகிற டிசம்பர் மாதம் போக்குவரத்திற்கு திறக்கப்படும். நாட்டில் தொடர்பு ஏற்படுத்துவதில் புரட்சி நடந்து வருகிறது. கர்நாடகத்தில் நெடுஞ்சாலைகளை கட்டமைப்பதில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இது ரூ.3 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.
இவ்வாறு நிதின் கட்காரி பேசினார்.