ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 2 பேர் படுகொலை
தார்வாரில் ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
உப்பள்ளி:
ரியல் எஸ்டேட் அதிபர்
தார்வார் டவுன் வித்யாநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட கமலாபுராவை சேர்ந்தவர் முகமது குடச்சி (வயது 35). ரியல் எஸ்டேட் அதிபர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முகமது குடச்சி, தனது வீட்டின் வாசலில் அமர்ந்து நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு முகமூடி அணிந்து வந்த 4 பேர் கொண்ட மர்மகும்பல், முகமது குடச்சியையும், அவரது நண்பரையும் சரமாரியாக தாக்கினர்.
மேலும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கோடரியை எடுத்து 2 பேரையும் தாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது குடச்சி தனது வீட்டுக்குள் ஓடினார். மேலும் அவரது நண்பர் அங்கிருந்து வெளியே தப்பி ஓடினார்.
2 பேர் படுகொலை
ஆனாலும் மர்மநபர்கள் அவர்களை விடாமல் ஓட, ஓட தாக்கினர். முகமது குடச்சி வீட்டுக்குள் புகுந்து அவரை கோடரியால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் முகமது குடச்சியின் நண்பரை வீட்டின் அருகே மர்மநபர்கள் மடக்கி அவரையும் கோடரியால் வெட்டி படுகொலை செய்தனர். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் உடனடியாக வித்யாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், வீட்டின் படுக்கை அறையில் இருந்து முகமது குடச்சியின் உடலையும், அவரது வீட்டின் அருகே இருந்து அவரது நண்பரின் உடலையும் போலீசார் மீட்டனர். பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதுபற்றிய தகவல் அறிந்ததும் உப்பள்ளி-தார்வார் மாநகர போலீஸ் கமிஷனர் ரமணகுப்தா சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர் அவர், இரட்டை கொலையில் தொடர்புடைய மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மேலும் வித்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தார்வார் டவுனில் ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.