மரத்தில் கார் மோதி விபத்து: புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் சாவு


மரத்தில் கார் மோதி விபத்து: புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மரத்தில் கார் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியாகினர். அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

சிக்கமகளூரு:

திருமண நிச்சயம்

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணாவை சேர்ந்தவர் கிரண் (வயது 32). இவர் சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகா சிவனி கிராமத்தில் மெஸ்காம் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் திருமணம் பேசி நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது. இவர்களின் திருமணம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 8-ந்தேதி ஹாசனில் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர். பத்திரிகையும் அச்சடித்து கொடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை கிரண், தனது நண்பரான நாகராஜ் (40) என்பவருடன் சென்னராயப்பட்டணாவில் இருந்து அஜ்ஜாம்புரா நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.

2 பேர் சாவு

காரை கிரண் ஓட்டினார். அப்போது அவர்கள் மாக்கேனஹள்ளி பகுதியில் வந்தபோது, கிரணின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இதில் கிரண், இடிபாடுகளிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நாகராஜ் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதி மக்கள் நாகராஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அறிந்ததும் அஜ்ஜாம்புரா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கிரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அஜ்ஜாம்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story