மூதாட்டி கொலை வழக்கு உறவினர் மனைவி உள்பட 2 பேர் கைது
சிவமொக்காவில் கள்ளக்காதலை கண்டித்ததால் மூதாட்டியை கொன்ற வழக்கில் உறவினர் மனைவி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவமொக்கா:-
மூதாட்டி கொலை
சிவமொக்கா தாலுகா கத்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரத்னா பாய்(வயது 65). கடந்த 15-ந் தேதி ரத்னாபாய் சுத்துக்கோட்டை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியின் அருகே தூங்கி கொண்டிருந்தார். இந்நிைலயில் மறுநாள் காலையில் அவர் அதே பகுதியில் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இதை பார்த்த கிராம மக்கள் கும்சி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கும்சி போலீசார் ரத்னாபாயின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது குடும்ப தகராறில் ரத்னா பாய் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. கொலையாளிகள் யார் என்பது குறித்து கும்சி போலீசார் விசாரித்து வந்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க கும்சி போலீசார் தனிப்படை அமைத்திருந்தனர். இந்நிலையில் தனிப்படையினர் நடத்திய விசாரணையில், ரத்னா பாயின் உறவினர் மனைவியான ஜோதி பாய் என்பவர் மீது சந்தேகம் எழுந்தது.
2 பேர் கைது
இதையடுத்து அவரை போலீசார் அழைத்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது ஜோதி பாயிற்கும், அதே கிராமத்தை சேர்ந்த அனுமந்தா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவிப்பதை ரத்னா பாய் பார்த்துவிட்டார். பின்னர் ரத்னாபாய் 2 பேரையும் அழைத்து எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன ஜோதிபாய் மற்றும் அனுமந்தா, ரத்னாபாயை கொலை செய்ய திட்டமிட்டனர்.
அதன்படி சம்பவத்தன்று நள்ளிரவு ரத்னா பாய் கிராமத்தில் உள்ள பள்ளியின் அருகே தூங்கி கொண்டிருந்ததை பார்த்து, அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜோதிபாய் மற்றும் அனுமந்தா ஆகிய 2 பேரை கைது செய்தனர். 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.