பெங்களூருவில் பெண்களிடம் நகை பறித்து வந்ததுடன் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேர் சிக்கினர்
பெங்களூருவில் பெண்களிடம் நகை பறித்து வந்ததுடன் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேர் சிக்கினர்
பெங்களூரு: பெங்களூருவில் பெண்களிடம் தங்க சங்கிலி பறித்து வந்ததுடன், கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட கேரளாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவை சேர்ந்தவர்கள் கைது
பெங்களூரு தெற்கு மண்டலத்தில் உள்ள ஜே.பி.நகர், அதை சுற்றியுள்ள பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் தங்க சங்கிலிகள் பறிக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபடும் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலமாக பெண்களிடம் தங்க சங்கிலிகள் பறித்ததாக 2 பேரை ஜே.பி.நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த பிரதீப் என்ற உன்னி (வயது 38), சனல் (34) என்று தெரிந்தது. இவர்கள் 2 பேரும் பெங்களூருவில் தனியாக நடந்து செல்லும் பெண்களை பின்தொடர்ந்து சென்று, அவர்கள் கழுத்தில் கிடக்கும் தங்க சங்கிலியை பறிப்பதை தொழிலாக வைத்திருந்தது தெரியவந்தது.
கள்ளநோட்டுகளை புழக்கத்தில்...
இதுதவிர 2 பேரும் கள்ளநோட்டுகளையும் புழக்கத்தில் விட்டு வந்ததும் விசாரணையில் தெரிந்தது. அதாவது 500 மற்றும் 2 ஆயிரம் முக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து வந்துள்ளனர். அந்த கள்ளநோட்டுகளை பெங்களூரு மற்றும் கேரள மாநிலத்தில் புழக்கத்தில் விட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
கைதான 2 பேரிடம் இருந்து 46 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.3.19 லட்சத்திற்கு ரூ.500 மற்றும் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 2 பேர் மீதும் ஜே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.