மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிக்க முயன்ற 2 மாணவர்கள் கைது
மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிக்க முயன்ற 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்
பெங்களூரு: பெங்களூரு நந்தினி லே-அவுட் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், அவர்கள் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வருவது தெரிந்தது. இவர்கள் ஒரு செல்போன் செயலி மூலமாகவும், நண்பர்களிடமும் 2 மாணவா்களும் கடன் வாங்கி இருந்தனர். அந்த கடனை அடைக்க முடியாமல் 2 பேரும் சிரமப்பட்டு உள்ளனர். இதையடுத்து, தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறித்து, அதனை விற்று கடனை அடைக்க 2 பேரும் முடிவு செய்தாா்கள்.
அதன்படி, கடந்த மாதம் (மே) 28-ந் தேதி நந்தினி லே-அவுட் பகுதியில் நடந்து சென்ற ஒரு மூதாட்டியின் கண்ணில் மிளகாய்பொடி தூவி தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். அந்த மூதாட்டி கூச்சலிட்டதால் பயத்தில் 2 மாணவர்களும் ஸ்கூட்டரில் தப்பி சென்றிருந்தது தெரிந்தது. கைதான மாணவா்களிடம் இருந்து செல்போன்கள், ஒரு ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, கைதான 2 பேர் மீதும் நந்தினி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.