கார் மோதி 2 வாலிபர்கள் பரிதாப சாவு
மங்களூரு அருகே கார் மோதி 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
மங்களூரு:-
கார் மோதல்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பனம்பூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று பழுதாகி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அந்த லாரியின் அருகே 3 பேர் நின்றிருந்தனர். அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று 3 பேர் மீது பயங்கரமாக மோதியது. விபத்தை ஏற்படுத்திவிட்டு அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது.
இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
2 பேர் சாவு
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 2 பேர் பரிதாபமாக இறந்துவிட்டனர். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் பனம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பலியானவர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பப்லு (வயது 22), அச்சல் சிங் (30) என்பதும், படுகாயம் அடைந்தவர் கேரளாவை சேர்ந்த அனீஷ் (42) என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் 3 பேரும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து கேரளாவுக்கு லாரியில் சென்று கொண்டிருந்ததும், பனம்பூர் பகுதியில் லாரியின் டயர் பஞ்சரானதால் டயரை மாற்ற லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கி நின்றபோது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது. இதுகுறித்து பனம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.