காட்டுயானை தாக்கியதில் 2 பெண்கள் படுகாயம்
மூடிகெரே அருகே காட்டுயானை தாக்கியதில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிக்கமகளூரு:-
காட்டுயானைகள் நடமாட்டம்
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா சுந்தரவள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் இந்த கிராமத்திற்குள் வந்து அட்டகாசம் செய்துவிட்டு செல்கின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காட்டுயானைகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்கும்படி கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும் காட்டுயானைகளின் நடமாட்டத்தை தடுக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் காட்டுயானை மீண்டும் வந்து அட்டகாசம் செய்துவிட்டு சென்றது. இந்த சம்பவம் சுந்தரவள்ளி கிராமத்தில் உள்ள காபி தோட்டத்தில் நடந்துள்ளது. அந்த கிராமத்தில் அப்துல் ரகுமான் என்பவருக்கு சொந்தமான காபி தோட்டம் உள்ளது.
பெண்கள் மீது தாக்குதல்
இந்த தோட்டத்தில் அதே கிராமத்தை சேர்ந்த பேபி என்ற பெண் வேலை பார்த்து வந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து காட்டுயானை ஒன்று காபி தோட்டத்திற்குள் புகுந்தது. அந்த யானை அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த பேபியை தாக்க முயன்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பேபி அங்கிருந்து தப்பியோட முயற்சித்தார். ஆனால் யானை நிற்கவில்லை. ேபபியை விடாமல் துரத்தி சென்றது.
பேபியை மடக்கி பிடித்த யானை இடுப்பு பகுதியில் காலால் மிதித்தது. இதில் பேபியின் இடுப்பு எலும்பு முறிந்தது. இதை பார்த்து சக கூலி தொழிலாளிகள் ஓடி வந்தனர். அவர்கள் சத்தமிட்டு யானையை அங்கிருந்து துரத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அதே தோட்டத்தில் வேலை பார்த்த லலிதா என்ற பெண்ணை துரத்தி சென்று தாக்கியது. இதில் லலிதாவிற்கு சிறிது காயம் ஏற்பட்டது.இதையடுத்து வனத்துறை அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டது.
நடவடிக்கை எடுக்கவேண்டும்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் பட்டாசுகள் வெடித்து யானையை அங்கிருந்து வனப்பகுதிக்குள் துரத்தினர். இதற்கிடையில் காயமடைந்த 2 பேரையும் கிராம மக்கள் மீட்டு மூடிகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது காட்டுயானைகள் நடமாட்டத்தால் விளை நிலங்கள் மட்டுமின்றி, உயிர் பலிகளும் ஏற்படுகிறது. எனவே காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் தொடர்போராட்டம் நடத்தப்படும் என்றனர். அதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.