குளத்தில் மூழ்கி 2 தொழிலாளர்கள் சாவு


குளத்தில் மூழ்கி 2 தொழிலாளர்கள் சாவு
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தரிகெரேயில் மீன்பிடிக்க சென்றபோது குளத்தில் மூழ்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

சிக்கமகளூரு-

2 பேர் சாவு

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா லிங்கதஹள்ளி போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஒரட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் கிரீஷ் (வயது 26), சரத் (28). இவர்கள் 2 பேரும் கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 பேரும் ஒரட்டி கிராமத்தில் உள்ள குளத்தில் மீன்பிடிக்க சென்றனர். கரையோரத்தில் இருந்து மீன்பிடித்து கொண்டிருந்த அவர்கள், மீன் எதுவும் சிக்காததால் தண்ணீருக்குள் இறங்கி மீன்பிடிக்க முயற்சித்தனர்.

அப்போது அவர்கள் இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இரவு நேரம் என்பதால் அந்தப்பகுதியில் யாரும் இல்லை. இதனால் அவர்கள் 2 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலீஸ் விசாரணை

இந்நிலையில் கிரீசும், சரத்தும் வீட்டுக்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் 2 பேரையும் பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து லிங்கதஹள்ளி போலீசில் அவர்கள் புகாா் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் 2 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை ஒரட்டி கிராமத்தில் உள்ள குளத்தில் 2 பேரின் உடல் மிதந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனே லிங்கதஹள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மீன்பிடிக்க சென்றபோது 2 பேரும் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து லிங்கதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story