பயஸ்வினி ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் சாவு


பயஸ்வினி ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் சாவு
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுள்ளியாவில் பயஸ்வினி ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் உயிரிழந்தனர். அவர்கள் நண்பர்களுடன் குளிக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

மங்களூரு:

கூலி தொழிலாளர்கள்

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா அரியட்காவை சேர்ந்தவர் ஜித்தேஷ் (வயது 19), படுவனூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் (19). இவர்கள் கூலி தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரும் தங்கள் நண்பர்கள் மேலும் 4 பேருடன் காரில் சுள்ளியாவுக்கு வந்தனர்.

பின்னர் அந்தப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு அங்குள்ள பயஸ்வினி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் ஆற்றில் நீச்சல் அடித்து உற்சாகமாக குளித்து கொண்டிருந்தனர்.

2 பேர் பலி

அப்போது, ஜித்தேசும், பிரவீனும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், அவர்கள் 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் அதற்குள் 2 பேரும் நீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி உடனடியாக சுள்ளியா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சுள்ளியா போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு படையினர் ஆற்றில் மூழ்கி பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

இதுகுறித்து சுள்ளியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story