சிறுமி பலாத்காரம் வழக்கில் 2 வாலிபர்களுக்கு தலா 20 ஆண்டு சிறை
சிறுமி பலாத்காரம் வழக்கில் 2 வாலிபர்களுக்கு தலா 20 ஆண்டு சிறை விதித்து கோலார் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
கோலார் தங்கவயல்:-
கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா மாஸ்தி வருவாய் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொள்ளஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவா. ராஜேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் பிரசாத். நண்பர்களான இவர்கள் இருவரும் கொள்ளஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியை கடந்த 2020-ம் ஆண்டு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுபற்றி மாஸ்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் வெங்கடேஷ் பிரசாத், கேசவா ஆகிய 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் மீது கோலார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கேசவா மற்றும் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். இதுதவிர பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க சட்ட சேவை ஆணையத்துக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.