பிரபல கட்டுமான நிறுவனத்தின் ரூ.20 கோடி சொத்துக்கள் ஜப்தி
வாடிக்கையாளர்களிடம் முதலீடு பெற்று மோசடி செய்த பிரபல கட்டுமான நிறுத்தின் ரூ.20 கோடி சொத்துகளை அமலாகத்துறை ஜப்தி செய்தது.
பெங்களூரு:-
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இன்ஜாஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் மிஸ்பவுதின் ஆவார். இந்த நிறுவனம் சார்பில் குடியிருப்புகளில் வீடுகள் கட்டி தருவதாக கூறி மக்களிடம் இருந்து பல லட்ச ரூபாய் முதலீடாக பெறப்பட்டது. ஆனால் அவர்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்படவில்லை, பணமும் திருப்பி கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து முதலீடு செய்தவர்கள் கேட்டபோது நிறுவனத்தார் முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் முதலீடாக பெறப்பட்ட பணத்தை பெற்று அந்த நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அந்த பணத்தை தனது சொந்த வங்கி கணக்குகளுக்கு மாற்றி, நிறுவனத்தார் செலவு செய்துவிட்டதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுகுறித்து வில்சன் கார்டன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கு சி.ஐ.டி. வசம் சென்றது. அவர்கள் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. விசாரணையில் இன்ஜாஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததும், அவற்றை கொண்டு நிலம், குடியிருப்புகளை சொந்த பெயரில் வாங்கி குவித்ததும் தெரிந்தது. இந்த நிலையில் பணமோசடி வழக்கில் தொடர்புடைய இன்ஜாஸ் நிறுவனத்தின் ரூ.20 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஜப்தி செய்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.