கன்னட ராஜ்யோத்சவா ஊர்வலத்தின்போது கருப்பு கொடி காட்டிய தலித் அமைப்பினர் 20 பேர் கைது-போலீஸ் குவிப்பு


கன்னட ராஜ்யோத்சவா ஊர்வலத்தின்போது கருப்பு கொடி காட்டிய தலித் அமைப்பினர் 20 பேர் கைது-போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூருவில் கன்னட ராஜ்யோத்சவா ஊர்வலத்தின்போது தலித் அமைப்பினர் கருப்பு கொடி காட்டினர். இதையடுத்து 20 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிக்கமகளூரு: சிக்கமகளூருவில் கன்னட ராஜ்யோத்சவா ஊர்வலத்தின்போது தலித் அமைப்பினர் கருப்பு கொடி காட்டினர். இதையடுத்து 20 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தலித் அமைப்பினர் போராட்டம்

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா ஜேனுகத்தே கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு 14 பேர் கூலி வேலைக்காக சென்றனர். அவர்களை காபித்தோட்ட உரிமையாளர் ஜெகதீஷ் கவுடா, ஒரு அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஜெகதீஷ் கவுடாவை கைது செய்யக்கூறி மாநிலம் முழுவதும் தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போலீசாருடன் தள்ளுமுள்ளு

கடந்த ஒரு வாரமாக தலித் அமைப்பினர் சிக்கமகளூரு டவுன் ஆசாத் பூங்காவில் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று அவர்கள் காபித்தோட்ட உரிமையாளரை போலீசார் இதுவரையில் கைது செய்யாததற்கு சி.டி.ரவி எம்.எல்.ஏ.வே காரணம் என்று குற்றம்சாட்டினர். மேலும் நேற்று காலையில் அவர்கள் ஆசாத் பூங்காவில் இருந்து ஊர்வலமாக தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு கன்னட ராஜ்யோத்சவா நிகழ்ச்சியையொட்டி ஊர்வலம் நடந்தது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலித் அமைப்பினர் கருப்பு கொடி காட்டினர். இதனால் அங்கு அசம்பாவிதம் நடைபெறும் சூழல் உருவானது. இதையடுத்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலித் அமைப்பினர் 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இந்த சந்தர்ப்பத்தில் போலீசாருக்கும், தலித் அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீஸ் குவிப்பு

மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் வந்தார். அவர் கைதான தலித் அமைப்பினரை சிறையில் அடைக்க கூறி உத்தரவிட்டார். அதையடுத்து போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story