பட்டாசு கடை உரிமையாளரிடம் ரூ.20 லட்சம் கொள்ளை
பெங்களூருவில் பட்டாசு கடை உரிமையாளரிடம் ரூ.20 லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு:
பெங்களூரு ஓசூர் ரோட்டில் வசித்து வருபவர் சந்திரசேகர் ரெட்டி. தொழில் அதிபரான இவர் ஹெப்பகோடியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பட்டாசு கடையில் வியாபாரம் முடிந்ததும் ரூ.20 லட்சத்தை எடுத்து கொண்டு தனது காரில் சந்திரசேகர், அத்திபெலே அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், சந்திரசேகர் ஓட்டி சென்ற கார் மீது மோதினர்.
இதனால் காரை நிறுத்திவிட்டு சந்திரசேகர் கீழே இறங்கினார். அப்போது சந்திரசேகரை சரமாரியாக தாக்கிய மர்மநபர்கள் ஆயுதங்களை காட்டி மிரட்டினர். பின்னர் காரில் இருந்த ரூ.20 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர். மர்மநபர்கள் தாக்கியதில் காயம் அடைந்த சந்திரசேகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் அத்திபெலே போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.