தொழிலாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை


தொழிலாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை
x

மைனர்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து ஹாவேரி கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

சிவமொக்கா:-

மைனர்பெண் பலாத்காரம்

சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா உதிரிவட்டிகேரி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரப்பா ஈரப்பா (வயது 42). காபி தோட்ட தொழிலாளி. இவருக்கும் ஹாவேரியை சேர்ந்த மைனர்பெண் ஒருவருக்கும் செல்போன் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் செல்போனில் பேசி வந்தனர். இந்த நிலையில் சந்திரப்பா, அந்த மைனர்பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி வந்துள்ளார்.

மேலும் அந்த மைனர்பெண்ணை, சிக்கமகளூரு மற்றும் ஹாசனில் காபி தோட்டத்தில் உள்ள வீடுகளுக்கு அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

20 ஆண்டு கடுங்காவல்

இதுகுறித்து அந்த மைனர்பெண், ஹாவேரி மாவட்டம் காகிநாலே போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்திரப்பாவை கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு நடந்தது. இதையடுத்து போலீசார், சந்திரப்பாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு ஹாவேரி போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி லிங்ககவுடா பாட்டீல் தீர்ப்பு வழங்கினார். அப்போது சந்திரப்பா மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.1.60 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த அபராத தொகையில் ரூ.1.50 லட்சம் மற்றும் அரசு சார்பில் ரூ.2.50 லட்சம் சேர்த்து ரூ.4 லட்சத்தை பாதிக்கப்பட்ட மைனர்பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.


Next Story