சிவமொக்காவில் ரூ.200 கோடி செலவில் பி.எஸ்.என்.எல். சார்பில் 4ஜி வசதியுடன் 225 செல்போன் கோபுரங்கள் ராகவேந்திரா எம்.பி. தகவல்
சிவமொக்காவில் ரூ.௨௦௦ கோடி செலவில் பி.எஸ்.என்.எல். சார்பில் 4ஜி வசதியுடன் 225 செல்போன் கோபுரங்கள் அமைக்கப்படும் என்று ராகவேந்திரா எம்.பி. தெரிவித்துள்ளார்.
சிவமொக்கா-
சிவமொக்காவில் ரூ.200 கோடி செலவில் பி.எஸ்.என்.எல். சார்பில் 4ஜி வசதியுடன் 225 செல்போன் கோபுரங்கள் அமைக்கப்படும் என்று ராகவேந்திரா எம்.பி. தெரிவித்துள்ளார்.
மலைநாடு மாவட்டம்
கர்நாடகத்தின் மலைநாடு மாவட்டங்களில் ஒன்று சிவமொக்கா. இந்த மாவட்டத்தில் தீர்த்தஹள்ளி, சாகர், ஒசநகர் போன்ற தாலுகாக்கள் மலை பிரதேசமாகும். இதனால் அந்த தாலுகாக்களில் உள்ள குக்கிராமங்களில் மத்திய தொலைதொடர்பு துறையின் பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் சரியாக கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால், இன்டர்நெட் சரியாக கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதுதொடர்பாக சிவமொக்கா தொகுதி எம்.பி. ராகவேந்திரா, பி.எஸ்.என்.எல். மண்டல அதிகாரியிடமும் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ரூ.200 கோடி செலவில்...
இதுகுறித்து ராகவேந்திரா எம்.பி. நேற்று சிவமொக்காவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிவமொக்கா மாவட்டத்தில் 4ஜி வசதியுடன் அதிநவீன செல்போன் கோபுரங்கள் அமைக்க மத்திய தொலைதொடர்பு துறை ஒப்புதல் வழங்கி உள்ளது. ரூ.200 கோடி செலவில் மாவட்டம் முழுவதும் 4ஜி வசதியுடன் 225 செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் செல்போன் கோபுரங்கள் நிறுவப்படும். அதிகபட்சமாக சாகரில் 89 செல்போன் கோபுரங்களும், ஒசநகரில் 35, தீர்த்தஹள்ளியில் 27 செல்போன் கோபுரங்களும் நிறுவப்பட உள்ளது.
இந்த செல்போன் கோபுரங்கள் அமைக்க பி.எஸ்.என்.எல். தலைமை அதிகாரி பிரவீன்குமார், பெங்களூரு அதிகாரி ரவி ஆகியோர் உதவி செய்துள்ளனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.