திருமணம் ஆகாத 200 வாலிபர்கள் மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பாதயாத்திரை
மண்டியாவில் 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாததால் 200 வாலிபர்கள் மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல முடிவு செய்துள்ளனர்.
மண்டியா:-
ஆடம்பர வாழ்க்கை
தற்போதைய காலக்கட்டத்தில் திருமண விஷயங்களில் பெண்களின் எதிர்பார்ப்பு எகிற தொடங்கி உள்ளது. தங்கள் வருங்கால கணவர் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும், சொந்த கார், வீடு என ஆடம்பர வாழ்க்கையை வழங்குபவராக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். இதன் காரணமாக நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் உள்ளனர்.
இந்த நிலையில் 30 வயதை கடந்த 200 இளைஞர்கள் தங்களுக்கு திருமணத்துக்கு பெண் கிடைக்காததால் விரக்தி அடைந்து, தங்களுக்கு விரைவாக திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டி கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்ல முன்பதிவு செய்துள்ள சம்பவம் கர்நாடகத்தில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
பாதயாத்திரை
மண்டியா மாவட்டத்தில் 30 வயதை கடந்தும் திருமணம் நடக்காமல் வாலிபர்கள் பலரும் உள்ளனர். இந்த நிலையில் மண்டியா மாவட்டத்தை சேர்ந்த 30 வயது கடந்த இளைஞர்கள், தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டும் என வேண்டி சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூரில் உள்ள பிரசித்தி பெற்ற மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல முடிவு செய்துள்ளனர்.
200 பேர் முன்பதிவு
இந்த பாதயாத்திரை மேற்கொள்வதற்காக பதிவு செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மண்டியாவின் அண்டை மாவட்டங்களான பெங்களூரு, மைசூரு, சிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் இருந்தும் வாலிபர்கள் பாதயாத்திரைக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இந்த பாதயாத்திரையை நிர்வகிக்க உள்ள குழு சார்பில் கூறுகையில், வருகிற 23-ந் தேதி மண்டியாவில் உள்ள தொட்டி கிராமத்தில் இருந்து பாதயாத்திரை தொடங்கும். 3 நாட்கள் 105 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து 25-ந் தேதி மலை மாதேஸ்வரா கோவலை பாதயாத்திரை வந்தடையும் என்றனர்.