வரலாற்றில் இருந்து பாடம் கற்க சொன்ன சீனாவுக்கு இந்தியா சரியான பதிலடி
வரலாற்றில் இருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிய சீனாவுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்துள்ளது.
புதுடெல்லி,
வரலாற்றில் இருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிய சீனாவுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்துள்ளது. 1962–ல் இருந்து நிலையும், இன்றைய நிலையும் வேறானவை என்று இந்தியா கூறி உள்ளது.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைத்தகராறு இருந்து வருகிறது.சமீப காலமாக சிக்கிம் பகுதியில் அசல் கட்டுப்பாட்டுக்கோட்டை தாண்டுவதாக சீன துருப்புகள் மீது இந்தியாவும், இந்திய வீரர்கள் மீது சீனாவும் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், கைலாஷ், மானசரோவர் யாத்திரை மேற்கொண்ட இந்திய ஆன்மிக பயணிகள் திபெத்தின் நாது லா பாஸ் வழியாக செல்ல சீனா தடை விதித்துள்ளது.
இதன் காரணமாக இந்திய, சீன எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில், சீன ராணுவ செய்திதொடர்பாளர் ஒருவர் பீஜிங்கில் அளித்த பேட்டியில், 1962–ம் ஆண்டு இரு நாடுகள் இடையே போர் நடந்ததை சுட்டிக்காட்டி, ‘‘இந்திய ராணுவம் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்’’ என்று கூறினார்.
இந்த நிலையில் மத்திய நிதி, ராணுவ மந்திரி அருண் ஜெட்லி டி.வி. சேனல் ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, சீனாவுக்கு சரியான பதிலடி கொடுத்தார்.அப்போது அவர் கூறியதாவது:–
அவர்கள் நமக்கு நினைவூட்ட விரும்பினால், அவர்களுக்கு சொல்லிக்கொள்வேன்; 1962–ல் இருந்த அன்றைய இந்தியாவின் நிலையும், இன்றைய 2017–ம் ஆண்டின் இந்தியாவின் நிலையும் வேறானவை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இந்திய எல்லை அருகே அமைந்துள்ள பூடான் பகுதியை சீனா ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறது.
இந்த பகுதியை பாதுகாப்பது தொடர்பாக இந்தியாவுக்கும், பூடானுக்கும் இடையே ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.