ராமர்கோவில் கட்டுவது குறித்து சாமியார்கள் ஆலோசனை உத்தரபிரதேசத்தில் 9–ந் தேதி நடக்கிறது


ராமர்கோவில் கட்டுவது குறித்து சாமியார்கள் ஆலோசனை உத்தரபிரதேசத்தில் 9–ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 3 July 2017 4:00 AM IST (Updated: 3 July 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 9–ந்தேதி உத்தரபிரதேசத்தில் சாமியார்கள் கூடி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்துகின்றனர். இதனால் இப்பிரச்சினை மீண்டும் பூதாகரமாக உருவெடுக்கிறது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப்பெரிய அளவில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதில் இந்து சமய அமைப்புகளும், பா.ஜனதாவும் உறுதியாக உள்ளன. அண்மையில் மாநில முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் இடைக்கால ஏற்பாடாக ராமர் கோவில் அமைக்கப்பட்டு உள்ள இடத்துக்கு சென்று வழிபட்டார். ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினைக்கு கோர்ட்டுக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட்டும் கருத்து தெரிவித்து இருந்தது.

இந்தநிலையில் வருகிற 9–ந்தேதி குரு பூர்ணிமா முடிந்ததும், உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரில் உள்ள நர்தானந்த் ஆசிரமத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக அனைத்து மாநில சாமியார்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக சீதாபூர் நர்தானந்த் ஆசிரமத்தின் தலைவரான சுவாமி வித்ய சைதன்ய மகாராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:–

பிரசாரம்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்த திட்டத்தை வகுப்பதற்காக சாமியார்களின் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. வருகிற 9–ந்தேதி முதல் ராமர் கோவில் கட்டுவதற்கான தீவிர பிரசாரமும் தொடங்கி வைக்கப்படுகிறது. சாமியார்கள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் இதற்காக ஆதரவு திரட்டப்படும்.

குரு பூர்ணிமா சடங்குகள் முடிந்ததும், உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளிலும் உள்ள ஆசிரமங்களுக்கு சிறப்பு ரதயாத்திரை சென்று அங்குள்ள சாமியார்களிடம் ராமர் கோவில் கட்டுவதற்கான பிரசாரத்தை மேற்கொள்வேன்.

இதேபோல் ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பக்கத்து மாநிலங்களுக்கும் ரத யாத்திரை சென்று ஆதரவு திரட்டுவேன். எனது ஒன்றரை வருட ரதயாத்திரை முடிந்த பிறகு மீண்டும் சீதாபூர் ஆசிரமம் திரும்புவேன். அப்போது ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக இறுதி திட்டம் தயாராகி விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மீண்டும் பூதாகரம்

கடந்த 27–ந்தேதி முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத்தை சந்தித்தது பற்றி அவர் கூறுகையில், ‘‘ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் 2019–ம் ஆண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டுவிடும் என உறுதியாக நம்புகிறேன்’’ என்று குறிப்பிட்டார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் சாமியார்கள் உறுதியாக இருப்பதாலும், இது தொடர்பாக தீவிர பிரசாரத்தை நாடு முழுவதும் அவர்கள் மேற்கொள்ள இருப்பதாலும் இப்பிரச்சினை மீண்டும் பூதாகரமாகி இருக்கிறது.


Next Story