மோடியின் டீ கடை சுற்றுலா தலமாகிறது ரூ. 8 கோடி நிதி ஒதுக்கீடு
மோடியின் டீ கடை சுற்றுலா தலமாகிறது அதற்காக ரூ. 8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் வட் நகரில் பிறந்தார். சிறு வயதில் அவர் வட நகர் ரெயில் நிலையத்தில் டீ விற்பனை செய்யும் பையனாக இருந்துள்ளார். அவர் வேலை செய்த டீ கடை தற்போதும் வட நகர் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் உள்ளது.
அந்த டீ கடையை பழமை மாறாமல், அதே சமயத்தில் புதிய வசதிகள் செய்து மேம்படுத்தி சுற்றுலா தலமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வட் நகரில் புகழ் பெற்ற சர்மிஷ்டா ஏரி மற்றும் படிக்கிணறு உள்ளது.
மேலும் வட் நகர் சுற்றுப் பகுதிகளில் பழம்பெரும் புத்த மடாலயத்தின் எஞ்சிய சிதைவுகள் உள்ளன. அங்கு தொல்லியல் துறை மூலம் அகழ்வாய்வு பணி நடந்து வருகிறது. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்தே சுற்றுலா தலம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பிறந்த வட்நகர் மற்றும் டீ கடை உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து சுற்றுலா தலமாக மேம்படுத்த ரூ.100 கோடி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. முதல் கட்ட பணிகளுக்காக மத்திய சுற்றுலா அமைச்சகம் ரூ. 8 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சுற்றுலா தலம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story