திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலில் விசித்திர சக்தி கொண்ட பாதாள அறை திறக்கப்படுமா?
திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலில், பாதாள அறையை திறப்பது பற்றி ஆய்வு செய்வோம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
புதுடெல்லி,
திருவனந்தபுரத்தில் உள்ள பழமையான பத்மநாப சாமி கோவிலில் ஏராளமான நிதி முறைகேடுகள் நடப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில், கோர்ட்டுக்கு உதவுவதற்காக மூத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியத்தை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. அவர் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், பத்மநாப சாமியின் நெற்றி திலகத்தில் இருந்த 8 வைரங்களை காணவில்லை என்று கூறி இருந்தார். இதுபற்றி முழுமையான விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டார்.
நீதிபதிகள் பதில்
இந்நிலையில், இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வைரங்கள் காணாமல் போன பிரச்சினையை கோபால் சுப்பிரமணியம் எழுப்பினார்.
அதற்கு நீதிபதிகள், ‘விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அது எல்லோருக்கும் தெரியும். இந்த நேரத்தில் நாங்கள் ஏதாவது சொன்னால், அது மிகையாக அமையும். ஆகவே, விசாரணை முறையாக நடக்கவில்லை என்று கருதினால், பிறகு கோர்ட்டுக்கு வாருங்கள்’ என்றனர்.
பாதாள அறை
பின்னர், பத்மநாப சாமி கோவிலில் பூமிக்கு அடியில் பொக்கிஷங்கள் வைக்கப்பட்ட பாதாள அறைகள் பற்றி கோபால் சுப்பிரமணியம் கூறியதாவது:-
‘பி’ என்ற ஒரு பாதாள அறையில் விசித்திர சக்தி இருக்கிறது என்ற அச்சத்தில், அந்த அறை மூடப்பட்டது. இந்த விஷயத்தில் தேவையற்ற பீதி கிளப்பப்படுகிறது. ஏற்கனவே ஒருமுறை திறந்து இருப்பதால், அதை மீண்டும் திறக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, அதை திறக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விரைவில் முடிவு
அதற்கு நீதிபதிகள், ‘கோவிலின் நிர்வாக பணிகளை நாங்கள் தொடர்ந்து கண்காணிக்க முடியாது. இருப்பினும், பாதாள அறையை திறப்பது பற்றி விரைவில் முடிவு செய்வோம்’ என்று கூறினர்.
மேலும், கோவிலின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பவரே, அதன் பாதுகாப்புக்கு மொத்த பொறுப்பாளராக இருக்க வேண்டும். கோவிலின் செலவுகளை அரசு நிர்ணயிக்கும் ஆடிட்டர்கள் தணிக்கை செய்ய வேண்டும், கோவில் பழுது பார்ப்பு பணிகளை நிபுணர்கள் செய்ய வேணடும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story