நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கில் சட்ட உதவி வழங்க இயலாது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்
நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கில் சட்ட உதவி வழங்க இயலாது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த பிப்ரவரி 18-ந் தேதி சட்டசபையில் நடந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த முன்வைக்கப்பட்ட வேண்டுகோளை சபாநாயகர் நிராகரித்தது தவறான நடவடிக்கை. ஜனநாயக நடைமுறைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இந்த நம்பிக்கை தீர்மானத்தை, செல்லாதது என அறிவிக்க வேண்டும்.
மேலும் ரகசிய வாக்கெடுப்பு வழியாக புதிய நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 5-ம் தேதி விசாரணை நடந்தது. விசாரணையின் போது மனுதாரர் கே.பாண்டியராஜன் தரப்பில் மூத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினார். விசாரணையின் போது, நீதிபதி தீபக் மிஸ்ரா ரகசிய வாக்கெடுப்பு நடத்த தமிழக சட்டசபை விதிகளில் இடமிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு கோபால் சுப்பிரமணியம், “ரகசிய வாக்கெடுப்பு நடத்த விதியில் இடமில்லாமல் இருக்கலாம். ஆனால் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. ரகசிய வாக்கெடுப்பை நடத்த விதிமுறையில் எங்கும் தடை விதிக்கப்படவில்லை” என்று கூறினார். அப்போது நீதிபதி தீபக் மிஸ்ரா, “இந்த அம்சம் தொடர்பாக வரும் 11-ந் தேதி விரிவாக விசாரிக்கலாம். அன்று மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கோர்ட்டில் விசாரணையின்போது ஆஜராகியிருக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தார். சட்ட உதவிக்காக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் ஆஜராக வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கில் சட்ட உதவி வழங்க இயலாது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளார். இவ்வழக்கில் தனிப்பட்ட முறையில் சட்ட உதவியை வழங்க இயலாது என தெரிவித்துவிட்டார். மனுதாரருக்கு சட்ட ஆலோசனையை வழங்கி வருவதால், சுப்ரீம் கோர்ட்டிற்கு வழங்க முடியாது, எனவே இதிலிருந்து விலகிக்கொள்கிறேன் என கூறிஉள்ளார். விருப்பம் இல்லை என்று தலைமை வழக்கறிஞர் விலகிக்கொள்ளும் நிலையில் பிற மூத்த வழக்கறிஞர்களை சுப்ரீம் கோர்ட்டு நியமனம் செய்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story