மத்திய அரசு ஊழியர்களின் படிகள் குறித்த 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு அரசிதழில் வெளியீடு


மத்திய அரசு ஊழியர்களின் படிகள் குறித்த 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு அரசிதழில் வெளியீடு
x
தினத்தந்தி 8 July 2017 3:45 AM IST (Updated: 8 July 2017 2:04 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு ஊழியர்களின் படிகள் குறித்த 7-வது சம்பள கமிஷன் சிபாரிசு, அரசிதழில் வெளியிடப்பட்டது.

புதுடெல்லி,

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றி அமைக்க 7-வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. அக்கமிஷன், 197 படிகளை ஆய்வு செய்தது. அவற்றில் 53 படிகளை கைவிடுமாறு சிபாரிசு செய்தது. 37 படிகளை மற்ற படிகளுடன் இணைக்குமாறு கூறியது.

சம்பள கமிஷன் கைவிடுமாறு கூறிய 53 படிகளில், 12 படிகளை கைவிடுவது இல்லை என்று மத்திய அரசு முடிவு செய்தது. மேலும், படிகள் குறித்த சிபாரிசுகளில், 34 திருத்தங்கள் செய்தது.

அரசிதழில் வெளியீடு

இந்த திருத்தங்களுடன் கூடிய 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுக்கு மத்திய மந்திரிசபை கடந்த மாதம் 28-ந் தேதி ஒப்புதல் அளித்தது.

இந்த சிபாரிசுகள், நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டன. இதனால், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் அடைவார்கள்.

7-வது சம்பள கமிஷன் சிபாரிசு செய்த படிகளால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.29 ஆயிரத்து 300 கோடி செலவாகி இருக்கும். ஆனால், படிகளில் திருத்தங்களும் செய்யப்பட்டதால், ரூ.1,448 கோடி சுமை அதிகரித்து, மொத்தம் ரூ.30 ஆயிரத்து 748 கோடி கூடுதல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாத சம்பளத்தில் கிடைக்கும்

உயர்த்தப்பட்ட படிகளை, ஜூலை 1-ந் தேதி முதல் அமல்படுத்த மத்திய மந்திரிசபை ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தது. எனவே, இந்த மாத சம்பள ரசீதிலேயே உயர்த்தப்பட்ட படிகள் இடம்பெறும் வகையில், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் உரிய ஆணையை பிறப்பிக்குமாறு மத்திய நிதி அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

நகரங்களைப் பொறுத்து, 8 சதவீதம் (ரூ.1,800), 16 சதவீதம் (ரூ.3,600), 24 சதவீதம் (ரூ.5,400) என்ற விகிதங்களில் வீட்டு வாடகைப்படி வழங்கப்பட உள்ளது.

வீட்டு வாடகைப்படி

அகவிலைப்படி 50 சதவீதம் மற்றும் 100 சதவீதத்தை எட்டும்போது, வீட்டு வாடகைப்படியை மாற்றி அமைக்க வேண்டும் என்று சம்பள கமிஷன் சிபாரிசு செய்தது. ஆனால், 25 சதவீதம் மற்றும் 50 சதவீதத்தை எட்டும்போதே வீட்டு வாடகைப்படியை மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நர்சுகளுக்கு மாதந்தோறும் உடை படி என்ற புதிய படி அறிமுகப்படுத்தப்படுகிறது. 

Next Story