பெண்கள் பற்றி அவதூறு: மலையாள நடிகர் இன்னசென்டுக்கு எதிராக விசாரணை மகளிர் ஆணையம் நடவடிக்கை


பெண்கள் பற்றி அவதூறு: மலையாள நடிகர் இன்னசென்டுக்கு எதிராக விசாரணை மகளிர் ஆணையம் நடவடிக்கை
x
தினத்தந்தி 9 July 2017 9:26 AM IST (Updated: 9 July 2017 9:26 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் பற்றி அவதூறாக கருத்து கூறிய மலையாள நடிகர் இன்னசென்டுக்கு எதிராக விசாரணை நடத்த மகளிர் ஆணையம் முடிவு செய்துள்ளது.

கொச்சி, 

சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர வேண்டிய நிலை உள்ளதாக சமீபத்தில் பல நடிகைகள் புகார் தெரிவித்து இருந்தனர். இது தொடர்பாக மலையாள நடிகர் சங்க தலைவரும், எம்.பி.யுமான இன்னசென்டிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், ‘மலையாள திரையுலகம் மிகவும் சுத்தமாக உள்ளது. முன்பு போல வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் நிலை தற்போது இல்லை. அப்படி படுக்கையை பகிர்பவர்கள் மோசமான பெண்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரிலேயே இந்த நிகழ்வில் ஈடுபடக்கூடும்’ என்றார்.

இது கேரள திரையுலகினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னசென்டின் கருத்துக்கு ‘சினிமாவில் பெண்களின் கூட்டியக்கம்’ என்ற அமைப்பு தங்கள் பேஸ்புக் தளத்தில் மறுப்பு தெரிவித்து இருந்ததுடன், மலையாள திரையுலகில் தற்போதும் இந்த அவலம் இருப்பதாக கூறியிருந்தது.

இந்த நிலையில் பெண்கள் பற்றி அவதூறாக பேசியதாக நடிகர் இன்னசென்ட் மீது கேரள மகளிர் ஆணையம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. அவரது கருத்துகள் தொடர்பாக பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் மகளிர் ஆணையம் தானாக முன்வந்து இந்த விசாரணை நடத்துவதாகவும், ஆணையத்தின் இயக்குனர் இதை மேற்கொள்வார் எனவும் மகளிர் ஆணைய தலைவர் எம்.சி.ஜோஸ்பின் கூறினார்.


Next Story